இலங்கையில் சகவாழ்வை சாத்தியப்படுத்துதல் - ஓர் இஸ்லாமிய நோக்கு – தொடர் - 01 - றாபி எஸ் மப்றாஸ்

இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஓர் இஸ்லாமிய நோக்கு –
தொடர் - 01
றாபி எஸ் மப்றாஸ்

(2016ம் ஆண்டு இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் பணப்பரிசில் பெற்ற கட்டுரை)

சகவாழ்வு வரைவிலக்கணமும் இஸ்லாமிய நோக்கும்

இன்று உலகில் பன்மைச் சமூகங்கள் பரந்து வாழும் நாடுகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் சகவாழ்வு பற்றிய கருத்தாடல்கள் மேலோங்கியிருக்கின்றன. இதற்கு எமது இலங்கைத் திரு நாடும் விதிவிலக்கல்ல. பல்லினங்களையும் பல்கலாச்சாரங்களையும் கொண்ட எமது இலங்கைத் திரு நாட்டின் கடந்த கால வரலாற்றுப் பக்கங்கள் கொடிய யுத்தங்களாலும் இனக்கலவரங்களாலும் இனமுறுகல்களாலும் நிரம்பியிருக்கின்றன. 
அண்மைக் காலமாக, இலங்கையின் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல மட்டங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவை எந்தளவு தாக்கம் செலுத்தக் கூடிய தீர்வுகளை வழங்கியுள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சகவாழ்வுக்கான சாத்தியப்பாடுகள், கருத்தாடல்கள் பற்றிப் பேசும் போது இஸ்லாம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இறைமார்க்கம் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறிளூ அது அடிப்படையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கின்றது. மேலும், சகவாழ்வுக்கான கொள்கைகள், கோட்பாடுகளை வகுத்து அதனை வரலாற்றில் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறது.
எனவே, இஸ்லாத்தின் அடிப்படைகளையும் கொள்கைகளையும் தழுவிய வகையில்  இலங்கையின் பன்மைச் சூழலில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான சில முன்மொழிவுகளையும் நடைமுறைத் தீர்வுகளையும் உள்ளடக்கியதாக இவ்வாய்வு அமைகிறது.

1. சகவாழ்வு என்பதன் வரைவிலக்கணம்

சகவாழ்வு என்பது மொழிக்கருத்தில் 'ஒரே காலத்தில் ஒன்றாக சேர்ந்திருத்தல்' ((1) The Great Lifco Dictionary, 15th Edition, Lifco Publishers PVT  LTD, P: 196)) என்று பொருள்படுகிறது. 
சகவாழ்வு என்பதற்கு முன்வைக்கப்படும் பலவிதமான வரைவிலக்கணங்களில் பொருத்தமான இரு வரைவிலக்கணங்களை பின்வருமாறு நோக்கலாம்.
'சகவாழ்வு என்பது வித்தியாசமான சித்தாந்தங்களைக் கொண்டுள்ள அரசுகள் அருகருகே சமாதானமாக இருப்பதாகும்'  ( ([2] Jess, Stein, The Random House Dictionary of English Language, P: 1382)

 'சகவாழ்வு என்பது அடிப்படையான சில வேறுபாடுகள் இருந்த போதிலும் பிற அரசுகள், தேசங்கள், மதங்களுடன் சமாதானமாக வாழும் கொள்கையாகும்.'  (  ([3] www.freedictionary.com)
இவ்விரு வரைவிலக்கணங்களை வைத்து நோக்கும் போது 'அடிப்படையில் முரண்பாடான வேறுபட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கொண்ட சமூகங்கள் தமக்கேயுரிய தனித்துவங்களையும் அடையாளங்களையும் பேணிய நிலையில் பரஸ்பரம் மோதல்களைத் தவிர்த்து புரிந்துணர்வுடன் சமாதானமாக வாழ்வதனை சகவாழ்வு குறித்து நிற்கிறது' என்ற முடிவுக்கு வரலாம்.

2. இஸ்லாமிய வரலாற்றின் ஒளியில் சகவாழ்வு

பல மேற்கத்தேய சிந்தனையாளர்களும் நாஸ்திகர்களும் மதங்களை சகவாழ்வின் எதிரிகளாகவே பார்க்கின்றனர். மதம் ஓர் அபின்ளூ மதம் பிற்போக்கானதுளூ மதம் மக்களை மண்டியிடச் செய்கிறது போன்ற கருத்துக்களைப் பரப்புகின்றனர். ஆனால் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இஸ்லாத்தின் 1400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் சமாதானத்திற்கும் சகவாழ்வுக்கும் அது கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வார்த்தைகளால் மட்டிட முடியாது. இஸ்லாம் ஆட்சி செய்த போதும் பிற ஆட்சியின் கீழ் இருந்த போதும் பிற மதக் கலாசாரங்களுடன் சுமுகமான சமூக உறவைப் பேணிவந்துள்ளது என்பதற்கான பல சான்றுகளை வரலாற்றில் பரவலாகக் காணலாம்.
1. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து 'அவ்ஸ்'இ 'கஸ்ரஜ்' ஆகிய கோத்திரங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தி விட்டு பின்னர் மேற்கொண்ட மதீனா சாசனத்தில், மனித சமத்துவமும் மத சகிப்புத்தன்மையும் பிற சமூகங்களுக்கான உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட்டன. நிறம், மதம், மொழி என எந்த வேறுபாடுகளும் பாராது அனைத்து சமூகங்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்த ஒரு ஒப்பந்தமாக மதீனா சாசனத்தைக் குறிப்பிட முடியும்.
அந்த வகையில், மதீனா சாசனத்திலிருந்து சில உதாரணங்கள் வருமாறு:- 
யூதர்களும் முஸ்லிம்களும் தத்தமது சமயத்தை முழுமையாகப் பின்பற்றலாம்.
பொது நன்மைகளை எட்டுவதற்கும் நற்காரியங்களிலும் முஸ்லிம்களும் யூதர்களும் பரஸ்பரம் உதவியும் உபதேசமும் செய்து கொள்வர்ளூ தீமையான விடயங்களில் பரஸ்பரம் உதவிக் கொள்ளமாட்டர்.
அநியாயமிழைக்கப்பட்டவர் யாராகவிருந்தாலும் அவருக்கு நீதியும் உதவியும் பெற்றுக் கொடுக்கப்படும்.( இப்னு ஹிஷாம், அஸ்ஸீரா அந்நபவிய்யா-1/503,504)
2. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம் தரப்புக்கும் முஸ்லிம் அல்லாத குறைஷிக் காபிர்கள் தரப்புக்கும் இடம்பெற்ற ஹூதைபியா உடன்படிக்கை, நபி(ஸல்) அவர்கள் செய்துக் கொண்ட நஜ்ரான் ஒப்பந்தம், அபூ உபைதா(ரழி) அவர்கள் 'ஹிம்ஸ்' பிரதேச மக்களுடன் செய்து பொண்ட ஒப்பந்தம், அப்துல்லாஹ் பின் ஸஃத் (ரழி) அவர்கள் 'நவ்பா' வாசிகளுடன் செய்த ஒப்பந்தம், கலீபா முஆவியா (ரழி) அவர்கள் ஆர்மீனியர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை என இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் அல்லாதவர்களோடு செய்யப்பட்ட அத்தனை உடன்படிக்கைகளும் இஸ்லாத்தின் சகவாழ்வுக்கான ஊக்குவிப்பையே பறைசாற்றி நிற்கின்றது.
3. நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் முஸ்லிமல்லாதோரது வறுமை, நோய், மரணம் போன்ற துன்பகரமான நிலையில் பங்கெடுத்துள்ளார்கள்.
'ஒரு முறை நபி (ஸல்) அவர்களை யூதனின் பிரேதம் கடந்து சென்றது உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அப்பிரேதம் கடந்து செல்லும் வரை மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அது பற்றி வினவப்பட்ட போது 'அதுவும் ஒரு ஆன்மா அல்லவா?' என்று விடையளித்தார்கள்.' ( முத்தபகுன் அலைஹி)     
'நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதோரை நலம் விசாரிக்க சென்றார்கள். அபூ தாலிப் சுகயீனமுற்றமிருந்த போது அவரை தரிசிக்க சென்றார்கள். அதே போல ஒரு யூதச் சிறுவன் நோயுற்றிருந்த போது அவனையும் நலம் விசாரிக்கச் சென்றார்கள்.' ( புஹாரி: 1356) 

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளார்கள். கடன் கொடுத்தல், வாங்குதல், வியாபார உடன்கடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றன இவற்றுள் அடங்கும். எத்தனையோ செல்வந்த முஸ்லிம் தோழர்கள் இருக்க நபி(ஸல்) முஸ்லிம் அல்லாதவர்களோடு இவ்வாறான தொடர்புகளை வைத்துக் கொண்டது சகவாழ்வின் யதார்த்தத்தை இவ்வுலகிற்கு பறைச்சாற்றுவதற்காகும். 
நபி (ஸல்) அவர்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சமூக விவகாரங்களில் முஸ்லிம் அல்லாதவர்களோடு இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமது இளம் பராயத்தில் 'ஹில்புல் புலூல்' என்ற அநீதிக்கு எதிரான இணக்க சபையில் குறைஷிகளுடன் ஒருவராக அங்கம் வகித்தார்கள். பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அத்தகைய ஹிஸ்புல் புலூல் போன்ற ஒரு சபை அமைக்கப்படுமானால் இன்னும் அதில் பங்குபற்ற விரும்புவதாக சொன்னார்கள். ( அஹ்மத்) 

இவ்வாறு நபி (ஸல்) அவர்களது வாழ்வும் இஸ்லாமிய வரலாறும் சமூகத்தில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற கரிசனையோடு நகர்ந்திருப்பதை எம்மால் அவதானிக்க முடியும்.

No comments:

Post a Comment