றாபி எஸ் மப்றாஸ்
இலங்கை போன்ற பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகளில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக இஸ்லாம் முன்வைத்துள்ள அடிப்படைகளையும் நடைமுறைகளையும் ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதொன்றாகும்.
மனித சமத்துவமும் சகோதரத்துவமும்
இலங்கைப் போன்ற பன்மைத்துவ சமூகங்கங்களில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாம் சொல்லும் மனித சமத்துவம் (Human equality), மனித சகோதரத்துவம் (Human solidarity) போன்ற சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.
உண்மையில், இஸ்லாம் மனிதர்களை அதி சிறந்த படைப்பாக கருதுகிறது. 'நிச்சயமாக நாம் ஆதமுடைய மக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தினோம். அவர்களை தரையிலும் கடலிலும் சுமந்தோம்ளூ மிகவும் நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு ரிஸ்க் அளித்தோம்ளூ நாம் படைத்த ஏனைய படைப்புக்களில் அதிகமானவற்றை விட மனிதர்களுக்கு விஷேட அம்சங்களை கொடுத்து சிறப்பித்தோம்' ( இஸ்ராயீ;ல் - 70)
இவ்வாறு மனித இனத்தை கண்ணியப்படுத்தியது மாத்திரமில்லாது மனிதர்களை மனிதர்களாக மட்டுமே இஸ்லாம் பார்க்கிறது. இனம், மதம், நிறம், குலம், கோத்திரம் போன்ற பேதங்களை கொண்டு மனிதர்களின் உயர்வு, தாழ்வை இஸ்லாம் தீர்மானிப்பது கிடையாது. மனிதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்பது இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அறிந்துக் கொள்ளுங்கள், ஒரு அஜமியை விட அரபிக்கும், ஒரு அறபியை விட அஜமியும் மேலானவர்கள் அல்ல, ஒரு கறுப்பனை விட வெள்ளையனும் ஒரு வெள்ளையனை விட கறுப்பனும் மேலானவர்கள் அல்ல.' (திர்மிதி - 3270)
இஸ்லாம் இவ்வாறு இனவெறியையும், நிற வெறியையும் முற்றாக நிராகரிக்கிறது. மேலும், அனைவரையும் மனிதன் என்ற பொதுத்தளத்தில் வைத்து நோக்குகிறது. நபி (ஸல்) அவர்களது சபையில் அபிஸீனிய நீக்ரோவான பிலாலும் (ரழி), பாரசீகத்தை சேர்ந்த ஸல்மான் (ரழி), ரோம் தேச சுஹைப் (ரழி) அனைவரும் சரிசமமாக அமர்ந்து கருத்துக்கள் பரிமாறும் மனித சமத்துவம் பேணப்பட்டதை வரலாறு பதிவுசெய்கிறது. ( நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ, பக்: 80)
அது மட்டுமல்லாது, மனிதர்களை மதத்தின் பெயரால் பிரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அங்கிகரித்தது கிடையாது. மேலும் மனித சமத்துவத்தை பேணும் அதே வேளை மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் எனவும் இஸ்லாம் கருதுகிறது.
'மனிதர்களே! உங்களது இரட்சகனை பயந்துக் கொள்ளுங்கள் அவன் தான் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். பின்னர் அவர்கள் இருவரிலும் இருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.' ( அந்நிஸா - 02)
எனவே, மனிதர்கள் அனைவரும் சகோதரத்துவ வாஞ்சையோடு பழக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அவாவாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஐவேளை தொழுகைகளைத் தொடர்ந்து தமது பிரார்தனைகளில் 'இறைவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என சாட்சி பகர்கிறேன்' என்று அடிக்கடி கூறுபவர்களாக இருந்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
அல்லாஹ்வை நெருங்கக்கூடிய ஆயுதமான பிரார்த்தனைகளின் மூலம் மனித சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியருப்பதோடு எவ்வித அரசியல் நோக்களுக்காகவும் அன்றி தூய்மையாக சொல்லப்பட்ட ஒரு பிரார்தனையாகவுமே இது நோக்கப்படுகிறது.
எனவே, இதனடிப்படையில் இலங்கைச் சூழலில் சிங்கள தமிழ் முஸ்லிம் போன்ற இன மத வேறுபாடுகளை களைந்து மனிதன் என்ற பொதுத்தளத்தில் ஒன்று பட வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாட்டினால் அடக்குமுறைகள் இடம்பெற ஒரு போதும் இடமளிக்கப்படக் கூடாது. மேலும், இனங்களுக்கிடையில் உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகள் பேணப்படுவதையோ இனங்கள் தமக்குள்ளே வகுப்பு வாத வேறுபாடுகளை வளர்த்துக் கொள்வதையோ அனுமதிக்கக் கூடாதுளூ மாற்றமாக மனித சமத்துவம் பேணப்பட வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது.
அரசியல், பொருளாதாரம், கல்வி என எல்லாத் துறைகளிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும். அரசியல் தீர்வுகளின் போது யாப்பு சீர்திருத்தங்களின் போதும் பல்கலைக்கழக அனுமதிகளின் போதும் சிறுபான்மை இனங்கள் ஓரங்கட்டப்படக் கூடாது. அது மட்டுமல்லாது இன மத கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால்; அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் ஒன்று பட வேண்டும் என இஸ்லாம் அழைக்கிறது. எனவே, இஸ்லாத்தின் பார்வையில் இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட மனித சமத்துவமும் சகோதரரத்துவமும் பேணப்பட வேண்டும்.
(2016ம் ஆண்டு இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் பணப்பரிசில் பெற்ற கட்டுரை)

No comments:
Post a Comment