இலங்கையில் சகவாழ்வுக்காக இறுதியாய் சில வார்த்தைகள் - தொடர் 09- றாபி எஸ் மப்றாஸ்

இலங்கைப் பன்மைச் சமூகத்தில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஒரு இஸ்லாமிய நோக்கு- (இறுதித் தொடர்)

றாபி எஸ் மப்றாஸ்

முடிவுரை

1) பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் சகவாழ்வு பற்றிய கருத்தாடல்கள் சமகாலத்தில் ஆழமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. பன்மைச் சமூகங்களின் நாடு என்ற வகையிலும் கடந்த காலங்களின் கசந்த அனுபவங்களால் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலை அதிகரித்துள்ள நாடு என்ற வகையிலும் இலங்கைச் சூழலில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது.

2) இஸ்லாம் பன்மைத்துவத்தை இறை நியதியாக ஏற்று அங்கீகரிக்கும் மார்க்கம் என்ற வகையிலும் வரலாற்றில் சகவாழ்வை சாத்தியப்படுத்திக் காட்டிய மார்க்கம் என்ற வகையிலும் இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொள்வது சாலப் பொருத்தமாகும்.

3) இஸ்லாத்தின் ஒளியில் இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு குறித்து நோக்கும் போது இரு முக்கிய பகுதிகள் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
        (1) பெரும்பான்மை, சிறுபான்மை என எந்த வேறுபாடுகளும் பாராமல் இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் கடைப்பிடிக்க வேண்டியவை.
        (2) இலங்கையின் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்க வேண்டியவை.

4) இலங்கையில் சகவாழ்வு மலர எல்லா சமூகங்களும் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
       1) இலங்கையின் அனைத்து சமூகங்களும் மனித சமத்துவத்தைப் பேணி நடப்பதோடு மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற வாஞ்சை உணர்வோடு பழக வேண்டும்.
     2) தத்தமது கொள்கைகளை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான வாய்ப்பு எல்லா சமூகத்தவர்களுக்கும் வழங்கப்படுவதோடு மற்ற சமூகத்தின் மத கலாச்சார பண்பாடுகளை மதித்து சகிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
     3) இனத்தை அல்லது மதத்தை மையப்படுத்திய சமூகப் பணிகளை விட தேவையுடையோருக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான தேசம் தழுவிய பணிகள் மேற்கொள்ளப்படுவது சாலச் சிறந்தது. இன மத வெறிகளையும் துவேஷங்களையும் களைந்து 'நாம் இலங்கையர்கள்' என்ற உணர்வும் தேசப்பற்றும் மேலோங்க வேண்டும்.
    4) பக்கச் சார்புகள் ஏதுமின்றி நீதி செலுத்தப்படுவதோடு சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் நடாத்தப்பட வேண்டும். விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு போன்ற நற்பண்புகள் அனைவர் மத்தியிலும் பரவலாகப் பேணப்பட வேண்டும்.

5) இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட சிறுபான்மை என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
     1) இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒலி பெருக்கிப் பாவனை, முஸ்லிம் பெணகளின் ஆடை விவகாரம், சுற்றுப் புற சூழல் சுத்தம், இறைச்சிக்காக அறுக்கப்படும் பிராணிகள் என முஸ்லிம்களின் சமூக வாழ்வொழுங்குகள் தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டும்ளூ பிற சமூகங்களின் வெறுப்புணர்வை சம்பாதித்து விடக்கூடாது.
     2) பன்மைச் சமூகங்களோடு கலந்து வாழும் அதே வேளை கரைந்து போய்விடக் கூடாது.
     3) பிற சமூகங்களுடன் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

6) மேற்குறிப்பிட்ட அத்தனை விடயங்களும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாத் துறைகளிலும் அதிகார மட்டம் முதல் அடி மட்டம் வரையிலும்  நடைமுறைப்படுத்தப்படுமாயின் நிச்சயமாக இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்படும்.


1. உசாத்துணை
அரபியில்...
1. லிமாதா அல்-இஸ்லாம், கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2004, மக்தபது வஹ்பா, கெய்ரோ.
2. அல்- இஸ்லாம் அல்லதி நத்ஊ இலைஹி, கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2004, மக்தபது வஹ்பா, கெய்ரோ.
3. தப்ஸீருல் முனீர், கலாநிதி உஸ்தாத் வஹ்பா ஸூஹைலி, பத்தாம் பதிப்பு-2003, தாருல் பிக்ர், டமஸ்கஸ்.
4. கஸாஇஸ் அல் ஆம்மா லில் இஸ்லாம், கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 1999, தாருஷ் ஷூரூக், கெய்ரோ.
5. நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ.
6. பீ பிக்ஹில் அகல்லிய்யாத் அல்-முஸ்லிமா, கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2001, தாருஷ் ஷூரூக், கெய்ரோ
7. தஆறுப் வத்தஆயுஷ் பைன கைஅரில் முஸ்லிமீன், கலாநிதி மூஸா ஷரீப், முதற் பதிப்பு – 2006, தாருல் இப்னு கஸீர்.
தமிழில்...
8. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் அதன் கருத்துக்களின் மொழி பெயர்ப்பு, மன்னர் பஹத் அச்சக வளாகம்.
9. பன்மைச் சமூகத்தில் சகவாழ்வும் தனித்துவமும், றஊப் ஸெய்ன், முதற் பதிப்பு - ஜூலை-2014, சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம்.
10. சகிப்புத்தன்மைக்கும் சமாதான வாழ்வுக்குமான இஸ்லாமிய அடிப்படைகள், அஷ்ஷெய்க் எஸ். எச். எம் பழீல், முதற் பதிப்பு, தேசிய ஷூறா சபை.
11. சகவாழ்வுளூ சாத்தியப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், கலாநிதி அஷ்ஷெய்க் எச். எல். எம் ஹாரிஸ், முதற் பதிப்பு - ஒக்டோபர்-2013, விஸ்டம் பப்ளிஷர்ஸ்.

வலைத்தளங்கள்...
1. www.vocabulary.com
2.. www.merriam-webster.com
3. https://en.m.wikipedia.org
4.       www.freedictionary.com

No comments:

Post a Comment