தொழிற்சந்தையை நோக்கிய இலங்கைக் கல்வியின் நீடித்த பயணம்... றாபி எஸ் மப்றாஸ்



இலங்கையில் கல்வி மற்றும் தொழிற்சந்தைக்கிடையேயான தொடர்பு - ஒரு விமர்சனப் பார்வை -



றாபி எஸ் மப்றாஸ்

இலங்கையின் கல்விச் செயன்முறையானது பண்டைய காலத்திலிருந்து ஆரம்பித்து கோயிற் பள்ளி, பிரிவேனாக்கள் என உள்நாட்டுக் கல்விமுறைகள் ஊடாகவும் பின்னர் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் பங்குப்பாடசாலைகள், கல்லூரிகள் எனவும் பரிணாமம் பெற்று இலவசக் கல்வியின் அறிமுகத்தோடு இலங்கையின் கல்வி அபிவிருத்தி ஒரு வேக வளர்ச்சியை அடைந்தது எனலாம்.
 மேலும் பாடசாலை மாணவர்களை அதிகமாக உள்ளீர்த்துக் கொளவதற்காக இலவச சீருடை, மதிய போசனை,போஷாக்குணவுத்திட்டம், இலவசப் பாடநூல் விநியோகம் என ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இலங்கையின் ஆரம்பக் கல்வி விருத்தியிலும் நாட்டின் எழுத்தறிவு வீதத்தை அதிகரிக்கச் செய்வதிலும்  நாடு வெற்றி கண்டுள்ளது எனலாம்.
என்றாலும் கல்வி பெறுகின்றவர்களால் சமூகத்தின் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளதா? நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யப்படுகிறதா? கல்வி ஒரு முதலீடாகக் கொள்ளப்பட்டு அதற்கான இலாபம் நாட்டுக்கு கிடைக்கின்றதா? போன்ற வினாக்களுக்கு இன்னும் ஆரோக்கியமான விடை கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கைக் கல்வியும் தொழிற்ச் சந்தையும்
பல்வேறு சமூக கலாச்சாரப் பின்னணியிலிருந்து வருகின்ற பிள்ளைகளுக்கும் கல்வி வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக தாய்மொழியைப் போதனா மொழியாக்குதல் மற்றும் 1961 ல் நியமிக்கப்பட்ட தேசியக் கல்வி ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட நால்வகைப் பாடசாலைகள் திட்டம் மற்றும் 1966ம் ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, 1967 ஆம் ஆண்டு வரையப்பட்ட கல்விச்சட்ட வரைபு, 1972ம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பல கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டு இலங்கையின் கல்வித்துறை தொழிற்சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பல்வேறு சிக்கல்களினால் அவை இன்றும் கொள்கைகளாகவே காணப்படுகின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

தொழிற்சந்தை என்பது தொழிலாளர்களுக்கான கேள்விக்கும் நிரம்பலுக்கும் ஏற்ப காணப்படும் தொழிலாளருக்கும் தொழில்வாய்ப்புக்கும் இடையிலான தொடர்பாகும். அதாவது சமூகத்தில் காணப்பாடும் தொழில்வாய்ப்பிற்கு ஏற்ப தொழிலாளர்கள் காணப்படுவார்களாயின் அங்கு தொழிற்ச்சந்தைச் சமனிலை காணப்படுகிறது எனலாம். அதே போல தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்து தொழில்வாய்ப்புக் குறைவாகவிருந்தாலோ அல்லது தொழிலுக்குப் பொருத்தமான ஊழியர்கள் இல்லாவிட்டாலோ அங்கு வேலைவாய்ப்பின்மை காணப்படும்.

இலங்கைக் கல்வியின் இயல்பும் தொழிற் சந்தையின் நிலையும்

உண்மையில், கல்வியும் பயிற்சியும் தொழிற்படை உருவாக்கத்தின் திறவுகோல்கள் ஆகும். இருப்பினும் இலங்கையின் வரலாற்று ரீதியான கல்வி முன்னெடுப்புக்கள் இத்தகைய தேவைகளை உருவாக்கத் தவறிவிட்டன என்றே கூறலாம். இன்று எமது நாடு இக்குறைபாட்டை நன்குணர்ந்து 2030 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் இளைஞர்களும் அவர்களுக்கான திறன்களும் என்பதுவும் மிக முக்கியமானதொன்றாகும்.

அந்தவகையில் யுனெஸ்கோ வினது கருத்துப்படி ' உலகெங்கிலும் இளைஞர்களின் வேலையின்மைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாவது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் திறன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் திறன்களுக்கிடையிலான பாரிய வேறுபாடுகளேயாகும்' இலங்கைக் கல்வி முறை குறித்து ஒரு அறிஞரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது ' பெரும்பாலான இலங்கையர்கள் அறிவாளிகள் ஆனால் திறனாளிகள் அல்லர்' எனவே தொழிற்சந்தை வேண்டிநிற்கும் திறன்களை இலங்கைக் கல்வி முறைமையினால் விரும்பியோ வெறுத்தோ பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதையே இவையனைத்தும் கட்டியம் கூறுகின்றன.

2019 ம் ஆண்டு முதல் காலாண்டு தகவலின் படி இலங்கையின் உழைக்கும் ஊழியர்படை 8.6 மில்லியன்கள் ஆகும் அதே நேரம் ஊழியர்படை வயதை எட்டியும் இன்னும் உழைக்காத தரப்பினரின் தொகை 7.7 மில்லியன்கள் ஆகும் எனவே 15 வயதுக்கு மேற்பட்டோரில் ஏறத்தாழ அரைவாசிப்பேர் தொழிற்சந்தைக்கு பங்களிப்புச் செய்யவில்லை. அதாவது ஊழியர்படைப் பங்களிப்பு வீதம் 52.6 என்பது தெளிவாகிறது. (www.statistics.gov.lk  )

மேலும் இலங்கையின் வேலையின்மை 2019ம் ஆண்டில் 4.7 வீதத்தினர் காணப்படுகின்றனர் இவற்றிலும் குறிப்பாக கா.பொ.த உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகைமை கொண்டவர்களின் வேலைவாய்பின்மை 7.9 வீதமாகக் காணப்படுகின்றது. எனவே இத்தகைய புள்ளிவிபரங்களிலிருந்து நோக்கும் போது கல்வித்தகைமை அதிகரித்துச் செல்லச் செல்ல வேலையின்மையும் அதிகரித்துச் செல்வது இலங்கையின் கல்வி தொழிற்சந்தைக்கான இடைவெளியை இன்னும் தூரமாக்குகிறதே தவிர குறைக்கவில்லை என்பது புலனாகிறது. அதிலும் குறிப்பாக கா.பொ.த உயர்தர கல்வித் தகைமைக்கு மேற்பட்ட பெண்களின் வேலையின்மை 10.6 வீதமாகக் காணப்படுவதானது பெண்களின் கல்வியறிவு அதிகரிக்கும் அளவுக்கு அவர்களின் தொழற்சந்தைக்கான பங்களிப்பானது வெகுவாகக் குறைகிறது என்பது புலனாகிறது. (www.statistics.gov.lk )

இதிலிருந்து இருவகையான வினாக்கள் எழுகின்றன. முதலாவது இலங்கையில் கல்வி கற்போரின் எண்ணிக்கை குறைவானதா? அல்லது வேலைவாய்ப்புக்கள் குறைவானதா? இரண்டுக்குமே இல்லை என்றே விடை பகர வேண்டும் ஏனெனில் 2019 ம் ஆண்டின் இலங்கையின் வயதுவந்தோர் எழுத்தறிவு வீதம் 96.3 வீதமாகும் பட்டதாரிகள் மாத்திரம் 10 -12 வீதத்தினர் ஆகும் மேலும் 350000க்கு மேற்பட்டோர் ஆரம்பக்கல்வி பெற்றோராவர். எனவே இலங்கையில் கல்வியறிவு குறைவாக உள்ளது என்பது பிழையான கருத்தாகும். (www.statistics.gov.lk )

காரணங்களும் விளைவுகளும்

அதேவேளை இலங்கையில் வேலைவாய்ப்புக்களைப் பொறுத்தவரையில் அன்றாட செய்தித்தாள்களைப் புரட்டிப்பார்த்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன மாத்திரமல்லாமல் சமூக ஊடகங்களிலும் இத்தகைய விளம்பரங்களைக் காணமுடியும் அதிலும் குறிப்பாக ஒரே விளம்பரங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யப்படுவதைக் காணமுடிகிறது. என்றாலும் இத்தகைய வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள போதிய திறன்படைத்தவர்களை எமது கல்வி முறை உருவாக்கவில்லை என்பதையே குறிப்பிட்டுக்காட்ட முடிகிறது.
இன்று திறன்சார்ந்த தொழில்வகைகளான மோட்டார் பொறிமுறை, கார்,கனரக வாகன பழுதுபார்ப்பு, மின்னியல், மின்பொருத்துனர் போன்ற துறைசார் வேலைவாய்ப்புக்கள் ஏராளமாக காணப்படுகின்ற போதிலும் அதனை நிறைவுசெய்யக் கூடியவர்கள் மிக அரிதாகவே உள்ளனர்.
எனவே இன்று கா.பொ.த உயர்தரத்தில் தோற்றும் 100000 மாணவர்களும் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய எத்தனிப்பதும் அவர்களுள் பெரும்hபலான மாணவர்கள் மானுடவியல் விஞ்ஞானக் கற்கைகளைக் கற்பதுவும் வேலையின்மைப் பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்துகிறது.

முன்மொழிவுகளும் ஆலோசனையும்

இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக பதின்மூன்றாண்டுக் கட்டாயக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் அத்திட்டத்தினை தொழிநுட்பக் கல்லூரிகளினதும் தொழிற்பயிற்சி அதிகாரசபையினதும் ஒத்துழைப்போடும் இலங்கை செய்ய விளைவது வரவேற்கத்தக்கதாகும்.
மேலும் கல்வி தொழிற்சந்தையை நிரப்புவதற்கு உதவுமாக இருந்தால் இலங்கையில் வேரூன்றியிருக்கும் வேலையின்மை, வறுமை, போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகக் கொள்ளை பல பிரச்சினைகளை மிக இலகுவாகத் தீர்வுக்கு கொண்டுவரலாம்.
மேலும் அரசு நல்ல பல கொள்கைகளை வகுப்பதோடு நின்றுவிடாது அதனை ஆசிரியர் பெற்றோர் மற்றும் மாணவர்களை அறிவூட்டல் செய்ய வேண்டும், அவர்களை போதியளவு ஊக்குவிக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்
மேலும் இன்னுமொருபடி மேலாகச் சொல்வதானால். சகல மாணவர்களுக்கும் தொழிற்கல்வி கற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏனெனில் பல விஞ்ஞானிகள் வகுப்பறைக்குள் மறைந்திருக்கலாம். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாணவர்களின் புத்தாக்கங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். பொதுவாகப் பாடசாலை ஒரு சிறந்த தொழில்சார் நிபுணனை உருவாக்குவதற்கான சிறந்த களம் என்பது அனைவராலும் உணரப்பட வேண்டும்.

 உசாத்துணைகள்

1) ஒப்பீட்டுக் கல்வியும் கல்விப்பிரச்சினைகளும் ளுவுP8505 இ இலங்கை திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட் பதிப்பு-2009
2) 2019ம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான ஊழியர் படை அறிக்கை
3)      https://www.sundayobserver.lk 
4)      https://www.statistics.gov.lk

3       5)     https://www.ft.lk
      6)     https://www.researchgate.net 
          7)      https://www.wikipedia.or


25.02.2020


No comments:

Post a Comment