விடை தேடும் பயணம்...
றாபி எஸ் மப்றாஸ்
பாவம்! பரீதா, அவள் அழகைக் கண்டு பலரும் அவளை பெண்கேட்டு வருவதும் 'அட்லீஸ்ட் ஒரு ஊடாவது குடுங்க' என்னு சொல்லி விட்டுப் போவதும் 'இவனாவது நம்மள முடிப்பானா? என ஏங்கி நின்றவள் கைக்கூலி கேட்டவுடன் விம்மிப் புடைப்பதும் அவளுக்கு பழக்கமாகிப் போய்விட்டது. அலை ஓயாத கடல் போல அவள் கன்னங்களில் கண்ணீரும் இதுவரை காயாது ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
சரீனா திருமணம் முடித்து சிறிது காலத்திலேயே கணவன் மூத்த மகன் முஸம்மிலையும் அடுத்து பரீதாவையும் பரிசாக கொடுத்துவிட்டு எங்கேயோ போய்விட்டான். இந்த ரெண்டு பிள்ளைகளையும் தோளில் சுமந்து வறுமையை தன் மடியில் சுமந்து அவள் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமில்லை.
இந்த வறுமையின் வாட்டத்தால் அந்த பிள்ளைகள் நல்ல சாப்பாட்டையோ உடுப்பையோ இதுவரை கண்டதில்லை. பாடசாலைப் பக்கத்திற்கும் அவர்கள் போனதில்லை. சரீனாவின் குடும்பத்தாரும் அவளைக் கண்டுகொள்வதுமில்லை. இப்படியே காலங்கள் உருண்டோடி இன்று பரீதாவின் கலியாண வயது தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளு போல பரிதவித்து நிற்கிறது. பார்ப்பதற்கு யாருமே இல்லாமல்...
மூத்த மகன் முஸம்மில் சின்ன வயதிலிருந்தே சரீனா சுட்டுக்கொடுக்கும் அப்பத்தை விற்று வந்தவன் காலப்போக்கில் 'தண்டச் சோறு' என்று சொல்லுமளவிற்கு சோம்பேறி மாடாய் மாறிப் போனான். கிழமையில் ஒரு தடைவ கடலுக்கு மாதத்தில் இரு முறை மேசன்களோடு வேலை செய்ய என தொழில் செய்து வந்தவன் - ஒரு நாள் எங்கேயோ எவளுடனோ கண் காணாத தூரத்திற்கு ஓடிப்போய் விட்டான்;. தாயையும் தங்கையையும் தவியாய் தவிக்கவிட்டு...
மூத்த மகன் முஸம்மில் சின்ன வயதிலிருந்தே சரீனா சுட்டுக்கொடுக்கும் அப்பத்தை விற்று வந்தவன் காலப்போக்கில் 'தண்டச் சோறு' என்று சொல்லுமளவிற்கு சோம்பேறி மாடாய் மாறிப் போனான். கிழமையில் ஒரு தடைவ கடலுக்கு மாதத்தில் இரு முறை மேசன்களோடு வேலை செய்ய என தொழில் செய்து வந்தவன் - ஒரு நாள் எங்கேயோ எவளுடனோ கண் காணாத தூரத்திற்கு ஓடிப்போய் விட்டான்;. தாயையும் தங்கையையும் தவியாய் தவிக்கவிட்டு...
அன்றிலிருந்து உடைந்துபோன தன் தாயின் மனதை இன்னும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்துடனும் திருமணத்திற்காக தவிக்கும் தன் வயதை தடுத்து வைக்க முடியாத சோகத்துடனும் பரீதாவின் வாழ்க்கைச் சக்கரங்கள் கண்ணீர் நிறைந்த வீதியில் தள்ளாடித் தள்ளாடி சென்றுகொண்டிருந்தன.
அன்று காலையில், மிஞ்சிய பழஞ் சோற்றை சரீனாவின் வீட்டுக் காலைச் சாப்பாடாய் கொடுக்க வந்த மரியம் 'அடியே சரீனா எத்தனை நாளைக்குத்தான் இப்படி இடியப்பம் சுட்டுக்கொண்டிருப்பாய் எப்ப பரிதாவுக்கு கலியாணம் காட்சி என்று பாக்கிறது' ஏதோ தெரியாதது போலவே கேட்டாள்.
'என்ன செய்ய பிள்ள, ஒரு ஊடாவது தரட்டாம், ஒரு ஊட்டுக்கு நான் எங்கே போறது?' சரீனா கவலையோடு பதிலளித்தாள்.
'ஒனக்கு ஒரு நல்ல வழியொன்டு இருக்கு. இப்ப கொஞ்சம் மேசன்மார் நாப்பது ஊட்டுத் திட்டதில வேலை செய்ய வந்திருக்கானுகள். அவனுகளுக்கு ஒரு குடில் இருந்தால் போதுமாம். ஓனக்குத்தானே இவ்வளவு பெரிய வாசல் இருக்கு. அவனுகளே குடில் கட்டிக்குவானுகள். நீ வாடகை மட்டும் வாங்கினா போதும். அப்படியே காலைச் சாப்பாடா இடியப்பத்தையும் வித்திடலாம்' என்று மரியம் ஆலோசனை சொன்னபடியே 'இந்தா இருபது ரூபா இடியப்பம் தா' எனக் காசைக் கொடுத்து இடியப்பத்தை வாங்கியபடி 'என்ன ஒன்ட முடிவு' என்று வினவினாள்.
'வந்த ராசாத்திய ஆராவது வேணா என்டு சொல்லுவாங்களா வரச்சொல்லு பிள்ள, அதவெச்சி ஊட்டுக்கு அத்திவாரம் என்டாலும் போட்டிடலாம்' என பதிலளித்து மரியத்திற்கு விடை கொடுத்தாள் சரீனா. ஊட்டில கொமர் ஒன்டும் இருக்கிற. இனி வரப்போறதும் ஆம்பிள்ளைகள். கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும் என ஒரு எச்சரிக்கை மணியையும் தன் மனதினுள் அடித்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் நகர்வதெற்கிடையில் சரீனாவின் வீட்டு முற்றத்தில் பலகைகள் ஓலைகள் கலந்து கம்பீரமாய் ஒரு குடிசைக் கோட்டை காட்சியளித்தது. ஏறத்தாழ ஏளெட்டு மேசன்மார் தங்க ஏதுவான குடிசை அது.
இனி என்ன சரீனா காட்டில் மழைதான். வீட்டு வாடகைஇ காலச் சாப்பாடு என வசூலித்து வசூலித்தே சரீனாவின் கைகள் நிறைந்துபோயின. வீட்டுக்கு அத்திவாரம் போட வேண்டும் என்ற ஆசையும் அவள் மனதில் வட்டமிட்டன. வந்த மேசன்மாரும் யாரையும் ஏமாற்றாமல் பண்பாடாக நடந்துகொண்டனர். விஷேடமாக 'சபீல்' விழுந்து விழுந்து உதவி செய்தான். சில போது வேலைக்குச் செல்லாமல் சரீனா வீட்டுக் கூரையை சரிசெய்வதும் அவள் வீட்டில் உடைந்துபோய் குழிவிழுந்து கிடக்கும் திண்ணையின் ஓட்டைகளை அடைப்பதுமாய் அட்டகாசமாய் வேலை செய்தான். வேலைக்கு கூலியாய் சரீனா ஏதாவது நீட்டினால் 'இதெல்லாம் தந்து என்னை வெக்கப்படுத்த வேணா' என்று அதை தட்டிக் கழித்து விடுவான்.
இவனது இந்த இரக்க சுபாவம் சரீனாவை கலங்க வைத்தது. தனது சொந்த மகனாக அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் நெஞ்சில் நஞ்சை வைத்துப் பழகினான் என்பது நாப்பது வீட்டுத் திட்டம் கட்டி முடித்து மேசன்மார் விடை பெற்றுப் போனதும் தான் தெரிந்தது.
ஆமாம். அந்தப்பாவி பரீதா என்ற அப்பாவியை என்ன செய்தான் என்பதன் விளைவு பரீதா வாந்தியெடுத்த போதுதான் சரீனாவுக்கே புரிந்தது. பரீதா இவ்வளவு நாளும் அடக்கியடக்கி வைத்த ஆசைகள் வீட்டுக்கு அத்திவாரம் போடும் வேளையில் உடைப்பெடுத்து அதளபாதாளத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டது. ஏழையாக இருந்தாலும் இதுவரை கட்டிக்காத்த மானம் இனி காற்றிலே பறக்கப் போவதை எண்ணி சரீனா உடைந்து போனாள்.
இனி யாரையும் குற்றம் சொல்லி காரியமில்லை. அவனை உடனே தேடும் பணியை ஆரம்பிக்க வேண்டும் என உணர்ந்தாள் சரீனா. பள்ளித் தலைவர் பழீல் ஹாஜியார் வீட்டுக்கு விரைந்தாள். விடயத்தை எடுத்துரைத்தாள். அவளுக்கே சொந்தமான அழுகையை இடைக்கிடையே கலந்து கொண்டாள். விடயம் வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டாள்.
'வந்த மேசன்மாரெல்லாம் டவுன் பக்கம்தான் ஆனா அவனைப்பத்தி ஒண்டும் தெரியா நான் விசாரிச்சு சொல்றன் நீ கவலைப்படாதே!' என ஆறுதல் கூறி அனுப்பினார் பழீல் ஹாஜியார்.
சரீனாவின் குடிசை அவளது மனம் போல் கும்மிருட்டாய் மாறிப்போனது. அவனது ஆசை வார்த்தைகளும் தன்னுள் புதைந்து கிடந்த ஆசைகளும் தவறச் செய்துவிட்டதையுணர்ந்த பரீதா இப்போது இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கும் முயற்சியில் இறங்கிவிட்டாள்.
எப்படித்தான் விடயத்தை மறைத்தாலும் இடியப்பம் சுடுவதை நிறுத்தி வீட்டுக்கு யாரும் வருவதை தடுத்தாலும் காற்றோடு காற்றாக அந்த கதை ஊரெல்லாம் பரவித்தான் போனது.
அன்று பள்ளிவாசல் தலைவர் சரீனாவையும் பரீதாவையும் பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமாக அழைத்தார். நிர்வாக சபை கூடியிருக்க பழீல் ஹாஜியார் ஒரு இருமலோடு பேச்சை ஆரம்பித்தார். 'அவன் டவுன் பக்கம்தான், ஏற்கனவே கலியாணம் முடிச்சு இரண்டு புள்ளைகள் வேற இருக்கு, இப்ப அவன் அந்தப்பக்கத்துக்கும் இல்ல, எங்க போனான் எண்டு யாருக்கும் தெரியா, குடும்பத்தோட போயிற்றானாம்' என அறிந்ததையெல்லாம் அறிக்கை போல் சொல்லி முடித்தார்.
அவரது ஒவ்வொரு வார்த்தையும் பரீதாவுக்கு இடியாய் இறங்கியது. கலங்கித் துடித்து நின்றாள் சொற்ப நேர இன்பம் தன் வாழ்வு முழுக்க துன்பமாக்;கியதை நினைக்கையில் தன்மீதே அவளுக்கு ஆத்திரம் வந்தது. என்ன செய்ய அழத்தானே முடியும். வேறென்னதான் தெரியும்?...
'எப்பிடியெல்லாம் ஒன்ன வாழவைக்கனும் எண்டு நெனச்சனடி கடைசியில் இப்படி போயிட்டாயே' என சரீனா ஒப்பாரிவைத்தழுதாள். பழீல் ஹாஜியார் பேசத் தொடங்கினார்.
'சரி> சரி> போனது போகட்டும்> நம்மட ஒரு முஸ்லிம் ஊரு என்டத்தால இஸ்லாமிய சட்டத்தை செஞ்சுதான் ஆனனும்...' இடையில் பேச்சை நிறுத்தி பக்கத்திலிருந்த நீரை அருந்திக் கொண்டார். சரீனாவின் விழிகள் அகல விரிந்திருந்தன. கண்ணீர் குளங்கட்டி நின்றது. பரீதாவின் நிலையோ பரிதாபம். 'அதனால் ஒங்கட மகள் புள்ள பெத்ததுக்கு பிறகு பள்ளிவாசல்ல வைச்சி 'ஹத்' அடிக்கணும்' என உறுதியாய் கூறினார்.
'கொஞ்சம் நில்லுங்க ஹாஜியார்' மெல்ல எழுந்த பைசல் மௌலவியை நோக்கி அனைத்து விழிகளும் வியப்பாய் திரும்பின. 'எத்தனையோ பணக்காரர்கள் இருந்தும் இஸ்லாம் சொன்ன ஸகாத் ஒழுங்காக குடுக்கத் தெரியாத இந்த முஸ்லிம் ஊர். இஸ்லாம் சொல்லாத கைக்கூலிய வாங்கி வயித்த நிரப்புற இந்த முஸ்லிம் ஊர், வட்டி வாங்கி வயித்த வளக்குறவர்களை தடுக்காத இந்த முஸ்லிம் ஊர், இந்த புள்ள மேல மட்டும் இஸ்லாமிய சட்டத்தை செய்யப்போகுதா?'
பழீல் ஹாஜியார் உட்பட அங்கிருந்த அனைவருமே வாயடைத்து நின்றனர். பைசல் மௌலவி தொடர்ந்தார். 'ஹத் அடிக்கிறது மட்டுமில்ல இஸ்லாம், இஸ்லாம் சொன்ன எத்தனையோ விஷயம் இண்டைக்கு நம்மட முஸ்லிம் ஊர்ல சீரழிந்து கிடக்குது. அதமொதல்ல நானும் நீங்களும் எல்லோருமா சேர்ந்து திருத்துவம் அதோட 'ஹத்' அடிக்கிறதால மட்டும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப்புள்ள ஊர்லயே ஒழுங்கா வாழ்றதுக்கான வசதி செஞ்சி கொடுக்கனும். இது மாதிரி ஊர்ல இருக்கிற குமர் புள்ளைகளையெல்லாம் பள்ளிவாயல் நிர்வாகத்திட கவனிப்புக்குக் கீழ கொண்டுவரணும் இப்பிடியெல்லாம் செய்யலையென்டா இந்தப் பாவம் நம்மள சும்மாவிடாது' பைசல் மௌலவியின் வார்த்தைகள் வெந்த புண்ணிலே வேல் குத்தி நின்ற இரு உள்ளங்களுக்கும் அருமருந்தாய் அமைந்தன.
பழீல் ஹாஜியார் சரீனாவையும் பரீதாவையும் போகும்படி சைக்கினை செய்தார்.
'பைசல் மௌலவி சொன்ன விஷயங்களை கொஞ்சம் கவனத்தில எடுப்பம் இன்ஷா அல்லாஹ். இது சம்பந்தமான கூட்டம் ஒன்டையும் வாற வெள்ளிக்கிழமை மஹரிபுக்கு பிறகு நடத்துவம்' என சபையோருக்கு அறிவித்தார் பழீல் ஹாஜியார் ஆரோக்கியமான பயணத்தை நோக்கி புறப்பட தயாரானவராக...
(22.04.2012)

எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது... வாழ்த்துக்கள்🎉🎉🎉
ReplyDelete