உனக்கு இல்லையா மகனே!!! (சிறுகதை) - றாபி எஸ் மப்றாஸ்

உனக்கு இல்லையா மகனே!!!

றாபி எஸ் மப்றாஸ் 

அந்த வேன் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 'குயிக்கா போ  டைம் போயிற்று' கை கடிகாரத்தை பார்த்தபடி அபுல்ஹசன் மௌலவி அவசரப்படுத்திதக் கொண்டிருந்தார். இன்று  காலை  பத்து  மணிக்கு அவருக்கு  பிள்ளை வளர்ப்பு சம்பந்தமான ஒரு கருத்தரங்கை நிகழ்த்த வேண்டியிருந்தது அதனால் தான் வழி நெடுகிலும்  'ட்ரைவரை  அடிக்கடி அவசரப்படுத்திக் கொண்டும் தான் தயார் செய்து வந்த குறிப்புக்களை பல முறை பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் கோட்டை போல் கட்டப்பட்டிருந்த பள்ளியின் முன் அந்த வேன் கம்பீரமாய் நின்றது. வேனிலிருந்து இறங்கிய அபுல்ஹசன் மௌலவிக்கு அமோக வரவேற்பு காத்திருந்தது, பள்ளி ட்ரெஸ்டி முதல் முஅத்தின் வரை அனைவரும் அவரை மன மகிழ்வோடு வரவேற்றனர். படித்த பெரும் வழக்கறிஞர்கள் முதல் சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் வரை தன் பிள்ளையையும் இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் பள்ளியில் குழுமியிருந்தனர்.

அபுல்ஹசன் மௌலவி கருத்தரங்கை ஆரம்பம் செய்தார், ஹம்து ஸலவாத்துடன் துவங்கிய அவர்,  இன்றைய பிள்ளைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள், ஆனால்  இஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும், அதற்கு பெற்றோர் செய்ய வேண்டிய மாற்று வழிகள் என்ன?, என பத்தையும் பலதையும் பற்பல குர்ஆன் வசனங்களோடு தொடர்புபடுத்தியும், நடைமுறை உதாரணங்களை எடுத்துக் காட்டியும் மிகச்சிறப்பாக தனது கருத்தரங்கை நடாத்திச் சென்றார், எல்லோரும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்;, அவர் எடுத்தியம்பிய அனைத்து விடயங்களும் அந்த ஊர் மக்களின் ஆழ் மனதோடு பேசிக் கொண்டிருந்தன. 

கருத்தரங்கின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது,பலரும் தம் சந்தேகங்களை வினவ எல்லா கேள்விகளுக்கும் தன் விரல் நுணியில் பதிலை வைத்திருந்தார் அபுல்ஹசன் மௌலவி, அப்போது ஒருவர் எழுந்து'மௌலவி அவர்களே, வெளியுர் மாணவர்கள் கொஞ்சப் பேர் எங்கட ஊர் வாய்க்காலுக்கு வந்து சாராயம் குடிக்கிறதும்,சிகரட் அடிக்கிறதும், குளிக்கப் போற பொம்புள பிள்ளைகளை பகுடி பண்ணுறதுமா சில மோசமான வேலைகளை செய்யுறாங்க!,  இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் ?......' என ஊரின் முக்கியமான பிரச்சினையை முன்வைத்தார்.

'உண்மையில இந்த பிரச்சினைக்கு காரணம், அந்த மாணவர்கள் ஒழுங்கா வளர்கப்படல்ல. நீங்க யாருக்கும் பயப்படத் தேவயில்லை, அந்த மாணவர்களை கையும் களவுமா பிடிச்சு, அவங்கட பெற்றோரை கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணணும், இத நீங்க பள்ளி நிர்வாகத்தால செஞ்சா ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது, அப்ப தான் அந்த பெற்றோருக்கும் புத்தி வரும் .' என கண்டிப்பான தீர்வை முன்வைத்தார் அபுல்ஹசன் மௌலவி. இதை ஊர் மக்களும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

பயன்மிக்க அந்த கருத்தரங்கை நிறைவு செய்து ஊர் மக்களினதும்,பள்ளி நிர்வாகத்தினதும் மனமார்ந்த நன்றிகளுடன் விடை பெற்றார் அபுல்ஹசன் மௌலவி.

றீங்...றீங்... அபுல்ஹசன் மௌலவியின் வீட்டுத் தொலை பேசி அலறியது.
'ஹலோ...அஸ்ஸலாமு அலைக்கும ;' 
'வாலைக்குமுஸலாம்...அபுல்ஹசன் மௌலவியா?...' 
'ஓம்... நீங்க யாரு?'
'ஆ... மௌலவி , நாங்க மஸ்'துல் ஹிலால் பள்ளியில இருந்து பேசுறம்'
'சொல்லுங்க என்ன விஷயம்?'
'மௌலவி...நாங்க சொன்ன அந்த வெளியுர ; பசங்கள பிடிச்சி வெச்சிருக்கிறம், பார்த்தா  படிக்கிற சின்ன பசங்க மாதிரி இருக்குது, நீங்க வந்து கொஞ்சம் புத்தி சொன்னா நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறம்'
'ஆ... சரி நான் ஒடனே வாறன்'
அலறிய தொலை பேசி உரையாடல் முடிய தன் வேனை எடுத்துக் கொண்டு பள்ளி நோக்கி பறந்தார் அபுல்ஹசன் மௌலவி.

'ஆ... வாங்க மௌலவி' வந்தவரை பள்ளித் தலைவர் ஆதரித்து 'ஒபீஸ்ல தான் இருக்கானுகள்' என்று கூறியபடியே காரியாலயத்திற்கு அழைத்துச் சென்றார்.

காரியாலயத்தில் அதிர்ச்சி காத்திருந்தது, பேயறைந்தாற் போல் நின்றார் அபுல்ஹசன் மௌலவி. அவருக்கு எதுவும் புரியவில்லை,அகல விரிந்திருந்த அவர் விழிகளிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது

ஆமாம் ...அங்கே வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தவர்களில்  அபுல்ஹசன் மௌலவியின் மகன் தான் முதன்மையானவன். அவன் கூனிக் குறுகிப் போய் நின்றிருந்தான்.ஆத்திரத்தை அடக்க முடியாத அபுல்ஹசன் மௌலவி அவனது கன்னத்தில் பளார் என அறைந்தார்,அதுவரை அவனுக்கு அவர் அடித்ததே இல்லை.
'ஊர் ஊராப் போய் உபதேசம் செஞ்சென் ஒனக்கு செய்யலயடா...,புள்ளய இப்படித்தான் வளக்கணும் எண்டு எல்லாருக்கும் சொன்னேன் அத நான் செய்யலயே...' என புலம்பியவாறு  அருகிலிருந்த கதிரையில் சாய்ந்தார்,அவருக்கு எவர் முகத்தையும் பார்க்க முடியவில்லை,வெட்கத்தில் தலையை குனிந்தபடி கண்ணீர் விட்டார்.
 
'இவர்ட மகனா இது!!?' அங்கு குழுமியிருந்த ஊர் மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போய் அபுல்ஹசன் மௌலவியைப் பார்த்தனர்;;.



15.06.2014 

No comments:

Post a Comment