றிஸானா வந்து விட்டாள்!
றாபி எஸ் மப்றாஸ்
அன்று இலங்கையில் உள்ள மும்மொழிப் பத்திரிகைகளும் ஒரே செய்தியைத் தான் தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தன. 'றிஸானா வந்து விட்டாள்!' என்பது தான் அச்செய்தி அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாய்......
'சவூதி அறேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட றிஸானா ஜனாதிபதியின் அயராத முயற்சியால் நாடு வந்து சேர்ந்தாள்.'
என்பது ஒரு பத்திரிகையின் செய்தி.
'இன்ன கட்சித் தலைவரின் வெளிநாட்டு விஜயத்தின் பின் றிஸானா நாடு வந்து சேர்ந்தாள்.' இது மற்றொரு பத்திரிகை.
றிஸானாவின் உயிர் காக்கப்பட்டதற்கு 'நான் தான் காரணம்' என நாட்டின் பல பாகங்களில் உள்ள அரசியல் வாதிகளும் உயர் பதவி வகிப்பவர்களும் உரிமை கொண்டாடினர்.
இலங்கையில் இருந்து சவூதி மன்னருக்கு நன்றிக் கடிதங்கள் பற்பலரிடமிருந்து சென்று குவிந்தன.
இன பேதம், மத பேதம், பிரதேச வாதம் பாராமல் அனைவரது உள்ளங்களிலும் ஒரு வித மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடியது.
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிர் எனும் சொத்தை சுமந்த வண்ணமாக வந்திறங்கிய றிஸானா எனும் மலரை ஊடக வண்டுகள் போய் மொய்த்தனர்.
'நான் ஏழு வருஷமா இந்த உசிரு எப்ப போகுமோ எண்டு பயந்து போய் இருந்தன், எனை அங்கிருந்து காப்பாத்தின எல்லாருக்கும் நன்றிகள்.' என ஆனந்தக் கண்ணீர் மல்க முத்தான சில வார்த்தைகளை ஊடக வண்டுகளுக்கு இரையாய் போட்டு விட்டு மறுபக்கம் திரும்பினாள்.
மூதூர் ஹாஜியார் ஒருவரின் வேனில் இலவசமாக வந்திருந்த றிஸானாவின் குடும்பம் மகிழ்ச்சியில் தடுமாறியது.
'என்ட மகளே! வந்துட்டியா!!' என றிஸானாவின் தாய் பரீனா அவளைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
பொதுவாக அனைத்துப் பள்ளிவாயல்களிலும் றிஸானா நாட்டுக்கு வர அருள்புரிந்து வல்லோனுக்கு நன்றி செலுத்தும் முகமாக விஷேட தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
றிஸானாவை வரவேற்க மூதூர் மக்கள் அவள் வீட்டின் முன்றலிலே கூடியிருந்தனர். அப்பிரதேச அரசியல்வாதிகள், பள்ளித்தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், ஹாஜியார் மார் ஏன் நாளாந்தம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகள் கூட அன்றைய நாளைத் தியாகம் செய்துவிட்டு றிஸானாவைக் காண வந்திருந்தனர்.
'இவ்வளவு பேர் என்னுல அக்கர காட்டுறாங்களே!...' என்று நினைக்கும் போது றிஸானாவுக்கு ஒருவிதப் பெருமிதமும் ஏற்பட்டது.
றிஸானா ஏழு வருடங்களின் பின் அக்குடிசையில் கால்பதிக்கும் போது அவளது உள்ளமும், உச்சியும் 'ஜில்' என்று குளிர்ந்தது. தனது நீண்ட நாள் ஆசையின் பயனாக தாய் பரீனாவின் கையினால் சோறு சாப்பிட ஆரம்பிக்க அவள் கன்னங்கள் ஆனந்தக் கண்ணீரை சாப்பிட்டன.
நாட்கள் ஒவ்வொன்றாக நகர நகர றிஸானா வீட்டைத் தரிசிப்போரின் எண்ணி;க்கையும் குறைய ஆரம்பித்தது.
வாரங்கள் போகப்போக றிஸானாவின் குடும்பத்தைக் கவனிப்போர் அருகிப்போயினர்.
அன்று அத்தனைபேர் வந்தார்கள். அனுதாபங்களையும் வாழ்த்துக்களையும் சொன்னார்கள். ஓரிரு அரிசி மூட்டைகளையும் கையில் ஐந்நூறையோ ஆயிரத்தையோ வைத்துவிட்டு காணாமல் போய்விட்டார்கள்.
றிஸானாவின் ஓட்டை விழுந்த தகரக் கொட்டில் அப்படியே இருந்தது!
தந்தை நபீக் கூலிக்கு மாரடிக்கும் கூலித்தொழிலாளியாய் இன்னும்...
சகோதர, சகோதரிகள் படிக்கவும், உடுக்கவும் வசதியின்றி நிர்க்கதியாய்...
இவை எதுவுமே இன்னும் இன்றும் மாறவி;ல்லை.
மாதங்கள் செல்லச்செல்ல றிஸானாவினதும் அவளது குடும்பத்தினதும் உயிர்த்தோழன் 'வறுமை' வந்து தன் வேலையைக்காட்டத் தொடங்கி விட்டான். இப்போது ஒருவேளைச் சோற்றுக்கும் அல்லாட வேண்டியவளாய் றிஸானா!...
ஓரிரு வருடங்கள் கடந்தன...
இப்போது ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் மாறிவிட்டன. றிஸானா என்ற பெயரை பலரும் மறந்தே போய்விட்டனர்.
இப்போது றிஸானா தனது தந்தை நபீக்கோடு ஒவ்வொரு ஹாஜியாரினதும், தனவந்தர்களினதும் வீட்டுப்படியேறத் தொடங்கிவிட்டாள். மீண்டும் வெளிநாடு செல்வதற்காக...?
உண்மையில் றிஸானா மீண்டும் வந்திருந்தால் அவளது நிலைமை பெரும்பாலும் இவ்வாறு தான் இருந்திருக்கும். அப்பெண்ணின் அருமை எமக்குப் புரிந்திருக்காது. பத்தோடு பதினொன்றாய் அவளது செய்தியும் போயிருக்கும். அவளைப் போன்ற பல பெண்களின் கண்ணீர் கானல் நீராக எம் கண்களில் காணாமலே போயிருக்கும்???
மர்ஹுமா றிஸானா தம் உயிரைக் கொடுத்து தன் உதிரத்தை சிந்தி எம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் நாமோ இன்னும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.
அவரது கண்ணீர்த் துளிகளும் உதிரத் துளிகளும் எமக்குச் சொல்வது தான் என்ன?
கண்ணீரில் கரைகின்ற கன்னியர் வாழ்வு தனை கரைசேர்க்க வேண்டுமெனச் சொல்லியிருக்கிறாள் றிஸானா.
சீதனப் பிச்சை கேட்டு சீரழிப்போரை கொஞ்சம் சீர்திருந்துமாறு சீறியிருக்கிறார் றிஸானா.
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஸக்காத்தை முறையாகப் பங்கிடுங்கள் என இரத்தம் சிந்தி சொல்லியிருக்கிறாள் றிஸானா.
இவ்வாறு சிந்திப்போருக்கு பல பாடங்களைச் சொல்லியிருக்கிறாள் றிஸானா!....
(09.01.2013 அன்று சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் புதல்வி றிஸானா நபீக் அவர்களின் ஞாபகார்த்தமாக றாபிதா கலமிய்யா சுவர்ச் சஞ்சிகையில் பிரசுரிக்க்ப்பட்ட ஆக்கம்)

உண்மை நிலை உள்ளவாறே சொல்லப்பட்டுள்ளது.. அருமையான நியாபகமூட்டல்💞
ReplyDeleteஉங்கள் பெறுமதி மிகு கருத்துக்கு நன்றிகள்❤️
Delete