இஸ்லாத்தின் பார்வையில் தேசப்பற்றும் தேசம் தழுவிய பணிகளும் -தொடர்-05- றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாத்தின் பார்வையில் தேசப்பற்றும் தேசம் தழுவிய பணிகளும் -தொடர்-05

றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாம் தாய் நாட்டின் மீதான பற்றை வலியுறுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் தாய்நாடான மக்காவின் மீதும் வாழ்ந்த நாடான மதீனாவின் மீதும் அதிகளவான பற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரைப் பார்த்து கூறிய வார்த்தைகள் பறைசாற்றுகின்றன. 
'ஓ மக்காவே! தேசங்களில் நீ மிகவும் சிறந்தது. எனக்கு மிகவும் விருப்பமான தேசமும் நீதான். என்னுடைய சமூகம் உன்னைவிட்டும் வெளியேற்றியிருக்காவிட்டால் உன்னைத்தவிர வேறெங்கும் நான் வசித்திருக்கமாட்டேன்.' ( திர்மிதி - 3926)
அதேபோல் மதீனாவில் வாழும்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். 'யா அல்லாஹ் எங்களுக்கு மக்காவை விருப்பமாக்கியது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை விருப்பத்துக்குரிய தேசமாக மாற்றிவிடுவாயாக.'  (புஹாரி - 6011)

எனவே, நபி (ஸல்) அவர்கள் பல்லினங்கள் பலமதங்கள், பலகோத்திரங்கள் குறித்த தேசத்தில் வாழ்ந்தபோதும் அவ்வேறுபாடுகளை அங்கீகரித்து அத்தேசத்தின் மீதும் பற்றுக் கொண்டார்கள். 

இன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பன்மைச் சமூகச் சூழலில் சகவாழ்வு மலர 'பிக்ஹூல் முவாதனா'  என்ற சிந்தனையை முன்வைக்கின்றனர். அதாதவது பன்மைச் சமூகங்களில் வாழும் தனிநபரோ அல்லது குழுக்களோ இன மத குல பேதங்கள் கடந்து ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் அரசியல் பொருளாதார சமூக உரிமைகளுடன் செயற்படுவதையே இச் சிந்தனை குறித்து நிற்கிறது. ( நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ, பக்: 80) 

இஸ்லாம் தேசத்தின் மீது பற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதோடு நின்று விடாமல் இன, மத, மொழி பேதம் பாராது அனைவருக்கும் உதவிகள் வழங்குமாறும் தூண்டுகிறது. வறுமை, நோய், கஷ்டம், கடன் போன்ற அத்தியவசியத் தேவைகளின்போது வேறுபாடுகளை மறந்து உதவிசெய்யுமாறு இஸ்லாம் பணிக்கிறது. 
'அவர்களுக்கு (முஸ்லிமல்லாதோருக்கு) நீங்கள் உபகாரம் செய்வதற்கும் நீதிசெலுத்துவதற்கும் அல்லாஹ் தடுக்கவில்லை.' (அல் மும்தஹினா - 08) 
இந்த வசனத்தை விளக்கும்போது 'இமாம் கராபி' முஸ்லிமல்லாதோரில் வாழும் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், பசித்தவர்களுக்கு உணவளித்தல், ஆடையற்றோருக்கு ஆடையளித்தல், அவர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாத்தல் என்று கூறுகிறார். (   பன்மைச் சமூகத்தில் சகவாழ்வும் தனித்துவமும், றஊப் ஸெய்ன், முதற் பதிப்பு - ஜூலை,2014, சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், பக்: 17)
'உனது சகோதரனின் முகத்தைப் பார்த்து  புன்முறுவல் பூப்பதும் ஸதகாவாகும், வழிதவறித் தடுமாறுகின்ற ஒருவருக்கு வழிகாட்டுவதும் ஸதகாவாகும், பாதையிலுள்ள மனிதனுக்கு தீங்கு விழைவிக்கும் கற்களையும் முட்களையும் அகற்றுவதும் ஸதகாவாகும், உனது வாளியினால் உனது சகோதரனின் வாளிக்கு நீரூற்றுவதும் ஸதகாவாகும்.' ( திர்மிதி)

இவ்வாறு பல ஹதீஸ்கள் இன, மத, குல வேறுபாடுகளின்றி மனித சகோதரத்துவத்தை மையப்படுத்தி எமது உதவிகள் அமைய வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
எனவே, சிங்களவர்,  தமிழர், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடுகளுக்கப்பால் 'இலங்கையர்கள்' என்ற உணர்வு மேலோங்க வேண்டும். டுடுசுஊயின் சகவாழ்வுக்கான பரிந்துரைகளில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இரட்டை அடையாளங்களைக் (Double Identity) கொண்டவராக அதாவது சிங்கள இலங்கையன், தமிழ் இலஙகையன், முஸ்லிம் இலங்கையன் என சொந்த அடையாளங்களைப் பேணும் அதே வேளை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. (Lesson Leaent & Reconciliation Commision (LLRC
 வெள்ளம், சுனாமி, சூறாவளி, தொற்றுநோய்ப் பரவல் போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை எமது இனங்களுக்குள்ளாலும் மதங்களுக்குள்ளாலும் சுருக்கிவிடாது பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும். அதேபோல் இஸ்லாமிய நிறுவனங்கள் கிணறு, மலசல கூடம், உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்போது கண்டிப்பாக பிற மதத்தாரை உள்வாங்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் இலங்கையர் என்ற உணர்வோடு தேசம் தழுவிய ரீதியில் மனிதாபிமான பணிகள் மேற்கொள்ளப்படுமாயின் இப்பன்மைச் சமூகங்கள் நிறைந்த நாட்;டில் சகவாழ்வு சாத்தியமாகும்.

2 comments: