இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சட்டத்தை மதித்தலும் நீதி செலுத்தலும் தொடர் - 06 றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சட்டத்தை மதித்தலும் நீதி செலுத்தலும்
தொடர் - 06

றாபி எஸ் மப்றாஸ்

சகவாழ்வைக் கட்டியெழுப்ப இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகளில் நீதிசெலுத்துதல் என்பது மிக முக்கியமான பண்பாகும். விருப்பு, வெறுப்பு, நட்பு, பகைமை பாராது, வேறுபாடுகளை நோக்காது நீதி யார் பக்கம் உள்ளதோ அதற்குச் சார்பாக குரல் கொடுக்க வேண்டும் என அல்குர்ஆன்  பணிக்கிறது. 
'ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை நீதி செலுத்தாமல் இருப்பதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள் ஏனெனில் அது இறையச்சத்திற்கு நெருக்கமானது.' ( அல் மாயிதா - 08)
 
அதேபோல், அநீதி இழைத்தவன் யாராக இருந்தாலும் எவ்வித பாராபட்சமுமின்றி அதற்கெதிராக குரல் கொடுப்பதும் நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்த ஒரு பண்பாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒரு அநியாயக்காரனைப் பார்த்து நீ அநியாயக்காரனே! எனச் சொல்ல எனது சமூகம் அஞ்சினால் அச்சமூகம் கைவிடப்படுகிறது.' (புஹாரி)
எனவே, அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து மட்டங்களிலும் நீதி செலுத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்ளூ உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், நண்பன், பகைவன், பணக்காரன், ஏழை என எவ்வித பாராபட்சங்களும் இன்றி தவறிழைத்தவனுக்கான தண்டனையும் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. 
'ஒரு முறை ஒரு குலத்துப் பெண் திருடிய போது அவளுக்குச் சார்பாக சிலர் கருத்துத் தெரிவித்தனர். அப்போது கோபமடைந்த நபியவர்கள் 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நாம் கையை வெட்டத் தயங்க மாட்டேன்.' என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.' (முத்தபகுன் அலைஹி) இவ்வாறு எவ்வித பாராபட்சமுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்படும் போது சகவாழ்வு மேலோங்குமென இஸ்லாம் கருதுகிறது.
அனைவரும் தத்தமது மத அனுஷ்டானங்களை பின்பற்றுவது போல நாட்டுச் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும். இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் குற்றங்களை அடுக்கடுக்காய் செய்த அதிகார வர்க்கம் பஞ்சணை மெத்தைகளில் படுத்துறங்குவதையும் எக்குற்றமுமிழைக்காத அப்பாவிகள் சிறைக்கூண்டுகளுக்குள் சிக்கித் தவிப்பதையும் காணமுடியும். மேலும் சில சிறுபான்மைச் சகோதரர்கள் அரசியல் கைதிகளாக இன்றும் சிறையில் வாடுகிறார்கள். நீதித் துறையிலும் பாராபட்சம் காட்டப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இத்தகைய கறைகள் அகற்றப்பட  வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், இனக்கலவரங்கள் என அனைத்துமே நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட உள்ளங்களை குணப்படுத்த முடியும். சகவாழ்வுக்கான அடித்தளங்களை வலிமையாக்கிக்கொள்ள முடியும். மேலும், வீதியொழுங்குகளை பேணுதல், வியாபாரத்தில் பதுக்கல், மோசடி, கலப்படம் போன்றவற்றைத் தவிர்த்து வரிகளை முறையாகச் செலுத்த வேண்டும். இலஞ்சம், ஊழல் போன்றவற்றை அதிகாரிகளும் பொதுமக்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு மக்களுக்கு மத்தியில் நீதிசெலுத்தப்படும் அதேவேளை மக்களும் இன மத பாரபட்சம் பாராமல் குறையேதும் கூறாமல் சட்டத்தை மதித்து நடக்கும் போது பன்மைச் சமூகங்கள்  மத்தியில்  சகவாழ்வு மலரும்.

No comments:

Post a Comment