சுனாமி எச்சரிக்கை! (சிறுகதை) - றாபி எஸ் மப்றாஸ்

சுனாமி எச்சரிக்கை! 

றாபி எஸ் மப்றாஸ்

'இண்டைக்கு ஆறு மணிக்குள்ள சுனாமி வருமாம்' செய்திகள் காற்றில் பறந்தன.

ஊரே பதற்றத்தில் பதறிப் போனது. 'கடலை அண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரவும்' என ஊடகங்களில் அடிக்கொரு முறை சொல்லிக்கொண்டேயிருக்க பள்ளிவாயல் ஒலிபெருக்கியும் ஓய்ந்தபாடில்லை.

வீதிகள் எங்கும் வாகனங்களின் சத்தங்கள் வானைப் பாய்ந்தன. எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டு ஆளுக்கொரு பக்கமாய் சிதறியோடினர். 

இதற்கிடையில் பொலிஸ் வண்டிகளும் ஊருக்குள் புகுந்து கடலோரம் வேடிக்கை பார்த்து நின்றவர்களை விரட்டியடித்தனர்.

மக்கள் கண்களில் பீதி பீறிட்டுப்பாய்ந்தது. இப்போது பள்ளிவாயல்களில் விஷேட தொழுகையும் துஆ பிரார்த்தனையும் ஆன்மீக வெள்ளம் ஊரெங்கும் அலைபாய்ந்தது. பள்ளிப்பக்கத்திற்கு வந்திராத பலரும் அவற்றில் கலந்துகொண்டனர். 

அனைவரது நாவுகளும் அல்லாஹ்வை திக்ர் செய்வதில் அசட்டை காட்டவில்லை. சிறியோர், பெரியோர், பெண்கள் என அனைவரும் பள்ளிவாயல்களில் தஞ்சம் புகுந்து தொழுவதிலும், துஆப் பிரார்த்தனைகள் செய்வதில் தம் நேரங்களை கழித்தனர். 

மஞ்சள் வெயில் மெல்ல மறைந்து மஹ்ரிபுத் தொழுகையும் பள்ளி நிறைய மக்களுடன் தொழுது முடிந்தது. உடனே பள்ளித் தலைவர் எழுந்து 'அல்லாஹ்வின் அருளால் சுனாமி எச்சரிக்கை வாபஸ்பெறப்பட்டுவிட்டது. கரையோரப் பிரதேசங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இனி அனைவரும் நிம்மதியாக வீடு செல்லலாம் அல்ஹம்துலில்லாஹ்' என்று அறிவித்து முடித்தார். 

ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஒருவரை ஒருவர் கைகுலுக்கி ஆனந்தமாக வீடு திரும்பினர். 

சிறிது நேரம் கடந்து போக 'சுனாமி எச்சரிக்கையினால் தடை செய்யப்பட்டிருந்த 'இன்னிசை இரவு' களியாட்ட நிகழ்ச்சி மீண்டும் இன்று இரவு மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெறும். எனவே அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என வீதி வீதியாக குத்துப் பாடல்களுடன் வந்த செய்தியோ ஊரெங்கும் பரவியது. 

விடயத்தை அறிந்த பலர் மைதானத்தை நோக்கி விரைந்தனர். இஷா தொழுகைக்கு இரண்டு ஸப்புகள்கூட நிறையாத அளவிற்கு மனித பற்றாக்குறை ஏற்பட்டது. பாமரன் முதல் படித்தவன் வரை பணக்காரன் முதல் ஏழை வரை அனைவருமே மைதானத்தில் இன்னிசை இரவோடு இரண்டறக் கலந்து போயினர். 

சுனாமி எச்சரிக்கை வந்த போது பள்ளிவாயலுக்கு வந்து இறைவனை திக்ர் செய்த நாவுகள் இப்போது பாடல்கள் இசைத்த வண்ணமும் இறைவனை நோக்கி கையேந்திய கரங்கள் ஆடல்களுடனும் உறைந்து போயின. மக்கள் அனைவரும் படைத்த ரப்பை அப்படியே மறந்து போயினர். 

இனி எம்மவர்களுக்கு இறை நினைவு வருவதென்றால் இன்னுமொரு சுனாமி எச்சரிக்கைதான் வரவேண்டும். 
26.12.2014

1 comment:

  1. எம்மவர்களின் மாறாக் குணமும் மார்க்கப் பற்றும் 😑

    ReplyDelete