காதல் செய்த மாயம்
றாபி எஸ் மப்றாஸ்
கட்டிலிலே புரண்டு புரண்டு படுத்தான். இருந்தும் தூக்கம் அவனை விட்டும் தூரமாய்த்தான் நின்றது. 'நாளைக்கி அவள் என்ன முடிவு சொல்லப்போறாளோ!' என்ற ஏக்கம் அவனது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் 'கடக் முடக்' என ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவளையே நினைத்து தலையணையை இறுக்கி அணைத்தபடி தூங்கிப் போனான்.
அடுத்த நாள் காலை ஏராளம் கற்பனைகளும், கேள்விகளும் நிறைந்த உள்ளத்தோடு ஸ்கூலுக்குப் போனவனது பார்வை எதையோ கண்டு நாணித்து நின்றது. கால்களோ அசைய மறுத்தன... இமைகளும் மூட மறுத்தன. ஆம்! அங்கே நாணம் நிறைந்த புன்முறுவலுடன் சஹானிதான் நின்றிருந்தாள். நெளிந்து வளைந்து அவனது கையில் ஒரு பேப்பர் துண்டை கொடுத்துவிட்டு திரும்பிப் பாராது ஒரே ஓட்டமாய் ஓடி மறைந்தாள்...
ஆயிரம் வினாக்குறிக்கள் அப்பிய முகத்தோடு அதனைப் பிரித்துப் படித்தான். 'சஹாம்! உங்க விருப்பம்தான் என் விருப்பம்' சிலேடையாய் சம்மதம் சொன்னாள் சஹானி. இனி என்ன... ஆனந்த தாண்டவந்தான். சந்தோஷ குளத்தில் குளித்தான். தன் கால்கள் அண்ட வெளியில் பறப்பது போல் இருந்தது அவனுக்கு...
வகுப்பில் நுழைந்தவன் 'மச்சான் ஸக்சஸ்டா! ஓகே சொல்லிட்டாடா!' கூக்குரலிட்டான் சஹாம். அவனுடைய நண்பர்களும் ஏதோ ஒலிம்பிக் போட்டியில் வென்றவனைப் பாராட்டுவதைப் போல் பாராட்டினர். உடனே நதீம்,
'அப்ப இண்டைக்கு பெரிய பார்ட்டி ஒண்டு இருக்கு போல' என முன்மொழிய
'உங்களுக்கு இல்லாமலடா' வழிமொழிந்தான் சஹாம்.
'இப்ப பிரன்சுக்கு பாட்டி போடனுமே காசுக்கு என்ன செய்வது' யோசணை தொற்றிக்கொண்டது. உடனே தீர்வும் பற்றிக் கொண்டது. 'ஆ ஐடியா!... உம்மா... சிறாஜ் சேர்ர புக்கொண்டு வாங்கனும் ஐந்நூர்வா தாங்க' உம்மாவும் எதுவும் பேசாது ஐந்நூறு மடமடத் தாளை நீட்டினார். இனி கேட்கவா வேணும்! சஹாமின் பார்ட்டி சும்மா களைகட்டிற்று. டேஸ்ட் கடை, கூல்ஸ்பொட் என வயிறு வெடிக்க வெடிக்க சாப்பாடு... நண்பர்களெல்லாம் வயிறாற சாப்பிட்;டு அவனையும் அவனது காதலையும் வாயாற வாழ்த்தினர்.
இப்ப வகுப்பில சஹாம்தான் ஹீரோ! அவனோடு ஒரு ஐந்தாறு பேரு... கேட்டால் 'லவ் குறூப்'. ஒரு பக்கம் 'லவ்' இன்னொரு பக்கம் 'பார்ட்டி' என சஹாமிம் சந்தோஷக் கும்மாளத்திற்கு வானமே எல்லை! காசு தேவைப்படும் போதெல்லாம் அப்பப்போ உம்மாவிடம் சின்னச் சின்னப் பொய்... தேவைப்பட்டால் வாப்பாட கடையின் கல்லாப்பெட்டிக்குள் கை! 'இப்போதெல்லாம் சஹானிட குரல கேட்காமத் தூக்கம் வருகுதில்ல' உடனே அவளுக்கு ஒரு 'போன்' அதற்கு அடிக்கடி 'ரீச்சாஜ்' இரவெல்லாம் காதல் படங்களைப் பார்த்திட்டு கண்ணீர் விட்டு ஒப்பாரி... அதில் வரும் நாயகன் 'சஹாம்' நாயகி; 'சஹானி' என கற்பனைகள் நிறைந்த கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான் சஹாம்.
காதல் பாடத்தில் அவன் கொடிகட்டிப் பறந்தாலும் பள்ளியறைப் பாடங்களில் கோட்டை விடுவது கண்ணுக்குத் தெரியவில்லை. பதினைந்து, இருபது, இருபத்தைந்து என வகுப்பில் பின்னேறிக் கொண்டிருந்தான். என்றாலும் காதலின் முன்னேற்றம் அதைவிடப் பெரிதல்லவா அவனுக்கு!
அவனது ரியூசன் நேரசுசி மறந்தான். அவளது நேரசுசியை மனனம் செய்தான். வீதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் அவர்களின் காதல். ஜோதி கொழுந்துவிட்டெரிவது ஊருக்கே தெரிய ஆரம்பித்தது! அப்படியானால் அவர்களது பெற்றோர் எப்படி விதிவிலக்காவர்?
வீடே நரகமாகியது.
'மொழச்சி மூணு எல வரல்ல அதுக்குள்ள லவ்வாம் லவ்வு' உம்மாவின் நச்சரிப்பு.
'அவன் ஒழச்சி எனக்கு தருவான்னு பாத்தா என்ட ஒழப்ப ஊராளுக்கெல்லாம் குடுக்கான்' வாப்பாவின் நாக்கைப் பிடுங்கும் கேள்விகள். பாடசாலையில் சேர்மாரின் குத்திக்காட்டும் பேச்சுக்கள். இவையெல்லாம் அவன் விழிகளைக் குளமாக்கின. இவை அனைத்தையும் சஹானிக்காகப் பொறுத்துக்கொண்டான். சஹானிக்கும் இதே நிலைதான். ஆனால் 'என்னதான் நடந்தாலும் யாருக்காகவும், எதுக்காகவும் லவ்வை விட்டுக்கொடுக்கிறதில்லை' என்பதில் இருவருமே உறுதியாகினர்!
'சஹாம்! ஓஎல் எக்ஸாமுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு ஒழுக்காப்படிடா' வாப்பாவின் தன்மையான பேச்சுக்களும்; அவனுக்கு காற்றோடு காற்றாய்ப் போயின. என்றாலும் சஹாம்! கெட்டிக்காரன்! எப்படியோ ஓஎல் பரீட்சையில் சித்தியடைந்து விட்டான். இப்போதுதான் அவனுடைய பெற்றோருக்கு உயிரே வந்ததுபோல இருந்தது.
'இவன் பாஸ்பன்னின கையோடையே ஓதலும் படிப்பும் இருக்கிறமாதிரி நல்ல மத்ரசா ஒன்றில சேர்த்திடனும். அப்பதான் உருப்படுவான்' வாப்பா திட்டம் தீட்ட உம்மா ஆதரவு வழங்க வற்புறுத்தல் ஆரம்பித்திற்று... மறுத்தான்... அடம்பிடித்தான். பயனேதுமில்லை. எவ்வளவு வெறுப்போடுதான் சென்றாலும் கெட்டிக்காரனல்லவா? நேர்முகப் பரீட்சையில் சித்தி பெற்று விட்டான்
சஹானியை பிரிந்து போவதை நினைக்க நினைக்க அவனுக்கு கைகள் உதறின. கால்கள் பதறின... கண்ணீர்த் துளிகள் சிதறின. மத்ரசாவிற்குப் போனவனுக்கு முன்னும் பின்னும் மேலும் கீழும் சஹானியின் முகம்தான் நிழலாடியது. வந்து இரு வாரம் கடந்தாலும் அவனிடம் எந்த வித மாற்றமும் இல்லை. வகுப்பிற்குச் சென்றால்தானே மாற்றம் வரும். ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு விடுதியில் தங்கிவிடுவதும் இரவில் இரகசியமாய்க் கொண்டுவந்த தொலைபேசியில் அவளோடு தொடர்பு கொள்வதும் சஹாமின் தொடர்கதையாய் மாறிப் போயின.
பலநாள் தொடர்பு கொண்ட தொலைபேசி ஒரு நாள் விடுதிப் பொறுப்பாளரிடம் அகப்பட்டது மாத்திரமின்றி இலவச இணைப்பாக தண்டப்பணம் வேறு... சஹானியோடு பேசாமல் நாட்கள் நகர்ந்தன. காலங்கள் கரையாது வலி தாங்க முடியாது மத்ரசாவிற்கு விடை கொடுத்தான் சஹாம். அவன் இல்லாத அந்த ஒரு மாதத்தில் ஊரே தலைகீழாக மாறியிருந்தது.
'சஹானி இப்ப ஓஎலுக்கு மும்முரமாகப் படிக்கிறாளாம். ரியூசனுக்குப் போறது வாறது எல்லாம் வாப்பாவோடுதானாம்' கனத்த செய்திகள் அவன் காதுகளுக்கு எட்டின. இத்தனையையும் மீறி அவளை சந்திக்க முயற்சித்த அத்தனை தடவைகளும் சஹானியின் வாப்பாவின் கையால தரமான அடிகளும் ஊரார்களின் ஏச்சுப் பேச்சுக்களுமே பரிசாகக் கிடைத்தன.
இப்படியே படிப்பிற்கும் விடை கொடுத்து விட்டான் சஹாம்.... ஆனால் சஹானி என்னதான் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணானவள். ஓஎல் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சியடைந்தாள்!
'அந்தப் பைத்திய காரண்ட தொல்லயில இருந்து பிள்ளயக் காப்பாத்திறன்டா ஓதலும் படிப்பும் இருக்கிற மாதிரி நல்ல லேடிஸ் மத்ரசாவொன்று இருக்கு. அதில சேத்திடுங்க' அனஸ் மௌலவியின் ஆலோசனையின்படி சஹானி மத்ரசாவில் காலடி எடுத்து வைத்தாள்.
சில காலந்தான் கடந்தாலும் பல உண்மைகள் அவளுக்குப் புலப்பட்டன. காதல் என்பது ஒரு கவர்ச்சிகள் நிறைந்த கற்பனை உலகம், அதன் ஆரம்பம் இனித்தாலும் வாழ்க்கையே பின்னர் கசந்து போகும். என்பதெல்லாம் அவள் உள்ளத்திற்கு நன்றாகவே உறைக்கத் தொடங்கின. தன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலானாள்.
சஹாம் இப்போது வாப்பாவின் கடையில் உதவியாளாராக வேலை செய்து கொண்டிருந்தான்... சஹானி இல்லாத குறையால் சிகரட்டை காதலிக்க ஆரம்பித்தான். அனைத்து அநாச்சாரங்களும் அவன்பாடுதான். 'சஹானி லீவில வந்திருக்காளாம்' செய்தியோ அவன் செவிகளை எட்ட செய்வதறியாது தவித்தான். அவளை ஒரு முறையாவது சந்தித்துவிடத் துடித்தான்... சஹானி வீட்டில் தாவிக்குதித்தான்... 'கள்ளன்டோவ்' எனக் கத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த உலக்கையை எடுத்து தலையில் தடார்! என ஒரு அடி போட்டார் சஹானிட வாப்பா...! அந்த அடியின் வலியைச் சுவைக்க முன்னரே தொடர்ந்து பல அடிகள் இடியாய்... உதிரம் உடலெங்கும் உதிர்ந்தோடி அவனது உள்ளாடையைக் கூட நனைத்திருந்தது. விழிகளின் விம்பங்கள் மங்க மயங்கி விழுந்தான்.
சஹாம் கண் திறந்த போது ஊர் ஆஸ்பத்திரியில் கட்டுகளுடன் கட்டிப்பிடித்தவனாய்... சஹாமின் பெற்றோருக்கு ஒன்றுமே செய்ய நாதியில்லை, கண்ணீர்விட்டு கதறி அழுவதைத் தவிர...
'எப்பவும் இப்படி பிரச்சினை பட்டுக்கே இருக்க ஏலாது' படிப்பு முடியும் வரைக்கும் சஹானியின் மாமாட வீட்டில தங்க ஏற்பாடு செய்துவிட்டார் சஹானியின் வாப்பா. அதுக்குப் பிறகு சஹாமுக்கு அவளை சந்திக்கவே முடியவி;ல்லை. அவள் எங்கே இருக்கிறாள் என்பதுகூட அவனுக்குத் தெரியாது.
அவளைத் தேடியவாறே பத்து வருடங்கள் பறந்தோடின... வாப்பாவின் சொத்தும் அவனால் கரைந்தோடின.
அன்று விடியற்காலை... 'கடையை திறக்கனுமே!' அவசரத்தில் துவிச்சக்கர வண்டியை துப்பாக்கி ரவையாக்கி வீதியில் செலுத்தினான்... முச்சந்தியில்... அந்தோ! பரிதாபம்... எதிரில் வந்த காரில் முட்டி மோதி புரண்டு விழுந்தான் சஹாம். அவனைப் பொறுத்த வரையில் தன் உளக் காயங்களை விட அவையெல்லாம் சிறிய காயங்கள்தான்...
காரில் வந்தவர் உடனே இறங்கி அவனைத் தூக்கி கைகால்களில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறே
'பார்த்து வாங்கப்பா! இப்பிடி கண்முன் தெரியாம எங்க போறீங்களோ!' என்றார். நிமிர்ந்து பார்த்தான,; மத்ரசாவில் இருக்கும் போது தனக்கு ஆறுதல் சொன்ன பைசல்தான் அது. இப்போது பைசல் மௌலவி இருந்தும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. அவராலும் அவனை அடையாளங்காண முடியவில்லை. அந்தளவுக்கு உரக்குலைந்திருந்தான். இத்தனைக்கும் மத்தியில் 'என்ன நடந்திற்றோ?' என ஏக்கம் தோய்ந்த முகத்தோடு கைக்குழந்தையுடன் காரில் இருந்து இறங்கி நின்றார் பைசல் மௌலவியின் மனைவி. ஆனால் அதுவே பத்து வருடங்களுக்கு முன் அவனுடைய காதலி சஹானி!
இடிந்து போனான் இது வரை வாங்கிய எல்லா அடிகளும் இப்போதுதான் வலித்தது அவனுக்கு. மனது கனத்துப் போனது... தன்னையறியாமலயே விழியோரம் நீர் கசிந்தது...
சஹானியும் சஹாமை இனங்கண்டாலும்... அவளால் வெளிக்காட்ட முடியவில்லை... இப்போது ஒரு குழந்தையின் தாயல்லவா? அவள்
'சரி, சரி, பார்த்துப் போங்க' பைசல் மௌலவியின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தான். கார் அவனைத் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. காரையே வெறித்துப் பார்த்தவன் தான் கடந்த நாட்களை நினைத்துப் பார்த்தான்.
'அந்த மத்ரசாவில் ஒழுங்காப் படிச்சிருந்தா இன்டைக்கு பைசல் மௌலவி இருக்கிற இடத்தில நான்' தொண்டை அடைத்துக்கொண்டது.
தலையில் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டே வீதியோரத்தில் குந்திக்கொண்டான் தனக்குள்ளே ஏதோ உழறியபடியே...
14.02.2014

superb story
ReplyDelete💞❤️❤️❤️
Delete