தொற்றிப் பரவும் கொரோனாவும் எட்டப் படாத இலங்கைக் கல்வி இலக்குகளும்
றாபி எஸ் மப்றாஸ்
விஞ்ஞானத்தின் வேக வளர்ச்சி விண்ணையும் எட்டிப் பிடித்து விட்ட வேளையில், மருத்துவத்தின் மட்டில்லாத வளர்ச்சி மரணத்திற்கு மாத்திரம்தான் மாத்திரை கண்டுபிடிக்க வேண்டும் என மமதை கொண்டிருந்த வேளையில், உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்து, பதற்றத்தில் பதற வைத்து, உலக வல்லரசுகளையும் ஸ்தம்பிக்கச் செய்தது ஒரே ஒரு நாமம், அதுதான் 'கொரோனா' எனப்படும் ஒரு வைரஸ்.
சீனாவில் ஆரம்பித்து மிக வேகமாக உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கியிருக்கின்றது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று இலங்கை உட்பட ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அவற்றின் பாதுகாப்பு, மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொதுமக்களைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், இலங்கையிலும் அடுத்தடுத்து விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவுகளும் அறிவித்தல்களும் அறிவுறுத்தல்களும் சட்டதிட்டங்களும் நாட்டு மக்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ பல அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும் பாதுகாப்புக் கருதி அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த இக்கட்டான கால கட்டத்தில், சட்டதிட்டங்கள் தொடர்பான அலட்சியப் போக்கும் மனித விழுமியங்களை மறந்து வெறும் சுயநலப் போக்குடன் சிந்திக்கும் மனப்பாங்கும் பொதுமக்களிடையே வளர்ந்திருப்பதைக் காணலாம். குறிப்பாக இளைஞர்களின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் குறித்து எமது நாட்டில் ஏராளமான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இத்தகைய நிலையில், 'நாட்டின் தற்காலக் கல்வி முறைமை மாணவர்களின் மனப்பாங்கு விருத்திக்கும் விழுமியங்களை விருத்தி செய்வதிலும் எத்தகைய வகிபங்கை ஆற்றியிருக்கின்றது?' என்பது மிகப் பெரும் வினாக்குறியாக மாறியிருக்கின்றது எனலாம்.
கொரோனா வைரசும் இலங்கை அரசும்
உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்து சுமார் 30 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தாக்கி அதிலும் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரணங்களை நிகழ்த்தியதோடு அதன் தொடர்ச்சியில் இலங்கையில் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்டோர் 500 ற்கும் மேற்பட்ட, 07 பேர் மரணத்தை எய்தியும் உள்ளனர்
;(www.worldometers.info ,27.04.2020,10.40pm )
கொரோனா பாதிப்புக்களிலிருந்து நாட்டு மக்களைக் காத்துக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டு அதிக பிரயத்தனங்களை அரசு மேற்கொள்கின்றது. கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான 22 அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய செயற்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் குடிவரவு குடியகல்வு முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள், மதஸ்தலங்கள் வாயிலாக கொவிட் - 19 தொடர்பான எச்சரிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து கொரானா பாதிப்புக்குள்ளானவர்களை இனங்கண்டு கொள்ளவும் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து பாடசாலைகள் அலுவலகங்கள் வர்;த்தக நிலையங்கள் என பெரும்பாலான அரச, அரசசார்பற்ற நிறுவனங்களையும் அலுவலகங்களையும் மூடி பொதுமக்களை தமது வீடுகளில் தனிமைப்படுத்தும் முறைமையையும் இலங்கை அரசு கையாண்டு வருகிறது.(
www.epid.gov.lk ) ) நாட்டின் அனைத்து வகையான சுகாதார, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரவு பகல் பாராது தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரசும் பொதுமக்களும்

பலவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டாலும் பெரும்பாலான பொதுமக்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியமானது என்றே கூறலாம்.
அந்தவகையில், கொவிட் -19 தொற்றுக்குள்ளான எந்த நோயாளியையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படக் கூடாது என ஒரு குழு போராட்டம் நடாத்தி அதில் 09 பேர் கைது செய்யப்பட்டனர்.(13.03.2020)
பலர் வெளிநாடுகளிலிருந்து தனிமைப்படுத்த மறுத்து அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பல்வேறுபட்ட வியூகங்களைக் கையாண்டு வந்தனர் இதன் காரணமாக புத்தளம் மாவட்டம் ஆரம்பத்தில் ஆபத்தான மாவட்டமாக அறிவிக்கப்பட்டது(15.03.2020)
மேலும் தன்னை தனிமைப்படுத்தாத ஒருவர் மட்டக்களப்பு நகரத்தில் இனங்காணப்பட்டார். பின்னர் இலங்கைப் பொலிஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்குச் செல்ல மறுப்பவர்களுக்கும் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கும் 06 மாத சிறைத் தண்டனையை அறிவித்து ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.(16.03.2020)
மேலும், இதாலி நாட்டிலிருந்து வந்த விடயத்தை மறைத்து நெஞ்சுவலி என றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரால் றாகம வைத்தியசாலையில் பதற்றம் நிலவியதோடு அவரோடு தொடர்புபட்ட 15 மருத்துவ உத்தியோகத்தர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்;(20.03.2020),
அதேபோல் களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட அட்டுளுகம பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபர் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி தனிமைப்படுத்தல் விடயத்தில் அலட்சியப்போக்காக நடந்து கொண்ட காரணத்தால் அந்த முழுப் பிரதேசமே அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.(27.03.2020)

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இளைஞர்கள் வீதியில் கூட்டமாகக் குழுமியிருந்து பாதுகாப்பு பிரிவினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவித்ததும் அரசின் அறிவித்தல்களை உதாசீனம் செய்து வந்ததோடு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 40000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏறத்தாழ 10000 க்கு மேற்பட்ட வாகனங்கள் பொலிஸார் வசமாக்கப்பட்டுள்ளது.( 27.04.2020)
அதுமட்டுமல்லாது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட வேளைகளில், குறிப்பாக கொழும்பு, அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக முண்டியடித்துக் கொண்டதைக் காணமுடிந்தது. (24.03.2020) பின்னர் கொவிட் 19 அபாய பிரதேசமாக மேல்மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டம் என்பன அறிவிக்கப்பட்டது. (27.03.2020)
தற்காலிகமாக மதக் கிரிகைகளுக்காக வணக்கஸ்தலங்களை மூடுமாறு அரசாங்கமும் மத தலைமையகங்களும் மத சட்ட விளக்கங்களை எடுத்துக்காட்டி பொதுமக்களை அறிவூட்டிய பின்னரும் சிலர் தொடர்ந்தும் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டமைக்காக கொரொவப்பத்தானைப் பள்ளிவாயலில் வைத்து 18 பேர் கைது செய்யப்பட்டனர் (27.03.2020)
இதற்கிடையில் நாட்டின் பிரபலமான விளையாட்டு வீரர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாம் வெளிநாடு சென்றதை தாமாக வெளிப்படுத்தி தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்ட முன்மாதிரிகளையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்றாலும் அத்தகையவர்கள் சொற்பமானவர்களே.
தற்காலத்தில் மாத்திரமல்ல வரலாறு நெடுகிலும் இத்தகைய விழுமியங்களை மறந்து குறுகிய மனப்பாங்குடன் சிலர் நடந்துகொண்டுள்ளனர் என்பதற்கு கடந்த கால இனக்கலவரங்களும் அத்துமீறிய போராட்டங்களும் போதைப் பொருள் கடத்தல்கள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களும் சிறந்த சான்றாகும்
இலங்கையில் பெரும்பாலானவர்கள் கற்றவர்களாகவும் அறிவுறுத்தல்களை விளங்கிக் கொள்ளக்கூடியவர்களாகவுமிருந்த போதிலும் இவ்வாறான பொதுமக்களின் அசிரத்தைப் போக்கும் சட்டங்களை உதாசீனம் செய்யும் மனப்பாங்கும் பாரதூரங்களைக் கருத்திற்கொள்ளாமையும் இளைஞர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இலங்கைக் கல்வி முறைமையின் வினைத்திறன் பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றன என்பது வெள்ளிடை மலை.
இலங்கையில் கல்வி வாய்ப்புக்களும் அதன் நோக்கங்களும்
கல்வி தொடர்பான வரைவிலக்கணங்கள் சிலவற்றை நோக்கும் போது கல்வியின் நோக்கங்களை சரியாக வரையறுத்துக் கொள்ள முடியும்.
'தன்னைப் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அறிவை வழங்கும் செயன்முறையே கல்வியாகும்' என சோக்கிரடீஸ் குறிப்பிடுகிறார். அதாவது தனது வல்லமை, ஆற்றல், குறைபாடுகள் மற்றும் தனது செயற்பாடுகள் சரியானதா அல்லது தவறானதா என்பதைப் புரிந்து கொள்வதையே கல்வி என அவர் கருதுகின்றார். (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்,திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009 பக்-05)
அதே போல் மகாத்மா காந்தி 'அறிவு(தலை),மனப்பாங்கு(இதயம்),திறன்(கை) என்பவற்றின் நிலையான விருத்தியே கல்வியாகும்' எனவே தகவல்களை சேமித்து வைத்திருப்பதால் மாத்திரம் ஒருவர் கற்றவர் எனும் அந்தஸ்தை அடைய முடியாது என்பதை காந்தி உறுதியாகக் கூறுகிறார். (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009. பக்-07)
1992 தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பொதுக் கல்வியின் நோக்கங்களை பின்வருமாறு சுருக்கிக் கூற முடியும். 'கல்வியானது மனிதநேயமுள்ள நாட்டுப்பற்றுள்ள நற்பிரஜைகளான எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய நல்லாளுமைகளை உருவாக்குவதே ஆகும்'. (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009. பக்-119)
அது மாத்திரமன்றி, எமது நாட்டில் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, புத்தகம் என கல்வி வாய்ப்பு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவில் காணப்பட்ட போதிலும் நாட்டின் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 2018ம் ஆண்டில் 91.7 (www.statistic.gov.lk )ஆக இருந்து வருகின்ற போதிலும், தற்போது 13 வருடக் கட்டாயக் கல்வித் திட்டமும் ஆரம்பத்தில் கட்டாயக் கல்வி வயதெல்லை 5 – 14 ஆகவும் என பாடசாலைக் கல்வி பல தசாப்தங்களாகக் கட்டாயப்படுத்தப்படுகின்ற போதிலும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளின் பாரதூரங்கள் மிகத் தெளிவாக பச்சிளம் பாலகன் முதல் வயோதிபர் வரை எடுத்துரைக்கப்பட்ட போதிலும் மனித விழுமியங்களைப் பேணுகின்ற நாட்டுச் சட்டவொழுங்குகளைக் கடைப்பிடிப்பதற்கான எவ்விதப் பக்குவமும் பெரும்பாலான மக்களிடம் ஏற்படவில்லையெனில் எமது நாட்டின் கல்வி முறை அதன் நோக்கத்தை அடைவதில் இதுவரை தோற்றுப் போயிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.
மனப்பாங்கு மற்றும் விழுமியங்களை விருத்தி செய்வதில் இலங்கைக் கல்வி முறையின் வகிபங்கு

பெரும்பாலும், இலங்கையின் கல்விக் கொள்கைகளை தேசியக் கல்வி ஆணைக்குழுவே தீர்மானிக்கின்றது. மேலும் இலங்கையின் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பு தேசியக் கல்வி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 08 வருடத்திற்கும் நாட்டுக்கேற்ப கல்வித் திட்டங்கள் கல்வியியலாளர்களால் மீள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
இலங்கையின் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு சுற்றாடல் சார் செயற்பாடுகள் பாடத்தில் 'நாம் இலங்கையர்' எனும் அலகுத் தொகுதியினூடாக இன நல்லிணக்கம், தேசப்பற்று, இன ஐக்கியம் என்பன போதிக்கப்படுவதோடு சமய பாடத்தினூடாக மனித விழுமியங்களும் அறவொழுக்கங்களும் கற்பிக்கப்படுகின்றன.
மேலும், இடைநிலை மாணவர்களுக்கு சுகாதாரம் உடற்கல்வி, வரலாறு, குடியுரிமைக் கல்வி மற்றும் சமய பாடங்களின் மூலமாக சுகாதார, நல்லிணக்க விழுமியம் சார் விடயங்கள் ஊட்டப்படுகின்றன. இவை தவிர இணைப்பாட விதான செயற்பாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஊடாகவும் சட்டதிட்டங்களை மதித்தல், கட்டுப்படுதல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற மனித விழுமியங்கள் வளர்க்கப்படுவதற்காகவே கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இலங்கையின் கல்விக் கொள்கைகளும் பாடத்திட்டங்களும் பெரும்பாலும் கனகச்சிதமாகவே திட்டமிடப்படுகின்ற போதிலும் விளைவுகள் பாதமாகவே அமைகின்றன எனின், கல்வியின் உண்மையான நோக்கங்கள் இலங்கையில் நிறைவேற்றப்படாமலிருப்பதற்கு இத்தகைய கல்வித் திட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள அதிகப்படியான கோளாறுகள்தான் காரணமாகும் என்ற முடிவுக்கு வரலாம்.
மனப்பாங்கு மற்றும் விழுமியங்களை விருத்தி செய்வதில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பிரேரணைகளும்
01. பயிற்சி பெறாத ஆசிரியர்களின் அதிகரிப்பும் ஆசிரியப் பயிற்சியின் தேவையும்
இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நாடளாவிய ரீதியில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் தீர்வுகாணும் முகமாக இலங்கை அரசு பயிற்சி பெறாத பட்டதாரிகளையும் தொண்டர் ஆசிரியர்களையும் அதிகளவில் ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவதன் விளைவாக இலங்கைக் கல்வித் துறையில் எதிர்பார்த்த விளைவுகளை அடைவதில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன எனலாம். மேலும் இலங்கையின் கல்வித் திட்டங்களையும் மாணவர்களையும் உரிய முறையில் விளங்கிக் கொள்ளாதவர்களிடம் மாணவர்கள் சிக்குண்டு மாணவர் விருத்தியும் அவர்களது மனப்பாங்கு விருத்தியும் குரங்கின் கைப் பூமாலையாகப் பரிதவித்து நிற்கிறது. பயிற்றப்படாத ஆசிரியர்களிடம் மாணவர்களை ஒப்படைப்பதானது போலி வைத்தியர்களிடம் நோயாளிகளை ஒப்படைப்பதைப் போன்றது. எனவே. ஆசிரிய பயிற்சிக்குப் பின்னரே எவரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் வேலையில்லாப் பிரச்சினைக்கு கோவைகளோடு உறவாடும் எந்தத் தொழில்தானும் வழங்கப்படலாம் ஆனால் ஆசிரிய சேவை என்பது நாட்டின் எதிர்காலத்தோடு தொடர்பானது அது தானதோன்றித் தனமாக வழங்கப்பட வேண்டிய சேவை அன்று.
02. திட்டமிடலாளர்களுக்கும் அமுல்படுத்துபவர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி
இலங்கைக் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பவர்கள் ஒரு குழுவினராகவும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றுமொரு குழுவினராகவும் காணப்படுவதால் சிலபோது நடைமுறைச் சாத்தியம் குறைந்த அல்லது திட்டங்கள் தொடர்பான போதியளவு அறிவு அமுலாக்கல் குழுவினருக்கு சென்றடையாத காரணங்களினால் இலங்கையின் பல கல்வித் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. விழுமிய விருத்திக்காக வடிவமைக்கப்படும் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி, தெளிவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமை மிக முக்கிய பிரச்சினையாகும்.
எனவே துறைசார் கல்வியியலாளர்களோடு அனுபவமும்; புலமையும் வாய்ந்த ஆசிரியர்களையும் கள ஆய்வுகளையும் முன்னிறுத்தி அத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்;. மேலும் நாட்டின் எல்லாப் பாகத்திற்கும் கல்வித்திட்டங்கள் குறித்த பயிற்சிகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
03. பரீட்சை மையக் கல்வியும் மாற்றத்திற்குட்பட வேண்டிய பரீட்சை முறையும்
இலங்கைக் கல்வித் துறையின் பிரதான மதிப்பீட்டு முறைகளான தவணைப்பரீட்சைகள், கா.பொ.த சா/த, கா.பொ.த உ/த மற்றும் பல்கலைக்கழக பரீட்சைகள் என்பன பெரும்பாலும் எழுத்து மூலமானதாகவே அமைவதனால் மாணவர்களின் மனப்பாங்கும் வெறுமனே கடதாசிகளிலேயே அளவிடப்படுகின்து. இதன் விளைவாக சூழலில் எவ்வித மனப்பாங்கு மாற்றத்தையும் மாணவர்கள் காட்டுவதற்கு உந்தப்படுவதில்லை எனலாம்.
இலங்கையில் மாணவர்களின் மனப்பாங்கு திறன்களை விருத்தி செய்கின்ற வகையில் மதிப்பீட்டு முறைகள் வகுத்துக் கொடுக்கப்பட வேண்டும். குறித்த மனப்பாங்குகளை பக்கச்சார்பின்றிய நேரடி, நேரில் அவதானிப்பு முறைகள், களப்பயணம், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எனப் பல்வேறு விதமாகவும் மூன்றாம் நபரைக் கொண்டும் அவதானிப்புச் செய்வதன் மூலம் அம்மதிப்பீடுகள் அமையலாம். மேலும் மனப்பாங்கு மாற்றம் குறித்த பிள்ளையிடம் ஏற்படாத வரையில் அப்பிள்ளை முழுமையாகத் தேர்ச்சியடைந்தவராகக் கருதப்படமாட்டார் என்ற கொள்கை மிகக் கண்டிப்பாகப் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்
04. அலட்சியப்படுத்தப்படும் விழுமியம்சார் பாடங்களும் மாற்றீட்டுக்கான தேவையும்
இன்று பாடசாலைகளில் சமயம், சுகாதாரம் போன்ற பாடங்கள் துறைசார் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவதிலும் பார்க்க வெற்றிடம் நிரப்பும் பாடங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வெறுமனே பரீட்சைகளுக்கு மாத்திரம் படித்து சித்தி பெறக் கூடிய பாடங்களாகவும் அதிகளவு சிரத்தை எடுக்காத பாடங்களாகவும் அவை மாற்றம் பெற்றுள்ளன.
எனவே குறிப்பாக விழுமியம் சார் பாடங்கள் தேசிய மட்டத்தில் கட்டாயப்படுத்தப்படுவதோடு அவற்றுக்கு துறைசார் ஆசிரியர்களை நியமிப்பதும் அதைக் கண்காணிப்பதும் கல்வி வலய மட்டத்தினால் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
05. வளர்ந்து வரும் பணத்தை மையப்படுத்திய கல்விக் கலாச்சாரம்
அதிகளவிலான வேதனத்தைப் பெற்றுத் தரக்கூடிய பாடநெறிகளையும் பட்டப்படிப்புக்களையும் பூர்த்தி செய்வதற்காக தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச்செல்லும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. எனவே தாம் கல்விக்காக செலவு செய்தவற்றை பின்னர் எவ்வாறெனினும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்கோடு மாணவர்களும் பெற்றோர்களும் செயற்படுவதால் மனப்பாங்கு விருத்திக்கோ அல்லது விழுமியங்களைக் கடைப்பிடிக்கவோ தற்கால இளைஞர்கள் தயாரில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
எனவே, அரச, தனியார் பாடசாலை, கல்விநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மருத்துவம், பொறியியல். கணக்கியல், என எத்துறையாகவிருந்தாலும் விழுமியம் சார் பாடங்கள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.
06. சூழல் காரணிகள்
பாடசாலையில் சில பண்பாடுகளையும் விழுமியங்களையும் கற்றுச் சென்றாலும் தமது சுற்றுப்புறச் சூழலில் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெற்றோரின் அசிரத்தையும் அலட்சியப் போக்கும், நாகரீகமாகக் காட்டப்படும் சினிமாக் கலாச்சாரம், சமவயதுக்குழுக்களுடனான அளவுகடந்த தொடர்பு போன்றன அத்தகைய தடைகளுள் சிலவாகும். இவற்றின் காரணமாக மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் விழுமிய விருத்தி சீரானதாக அமைவது சிரமசாத்தியமானதாகக் மாறியிருக்கிறது.
எனவே, மாணவர்களுக்கு சூழல் மையக்கல்வி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு விழுமிய பண்பாட்டு விருத்திக்கென மேலதிக நேரங்களும் அவற்றுக்கான மேலதிக வேதனங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் பெற்றோர்கள் பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடைமுறைகள் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை
எனவே, மாணவர்களினதும் இளைஞர்களினதும் மனப்பாங்குகள் விருத்தி செய்யப்படுவதற்கான திட்டங்களும் நடைமுறைகளும் மிகவும் அவசரமாக கல்வித்துறையினால் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இன்றைய கொவிட்-19 சமூகப் பிரச்சினையாக மாறியிருப்பதைப் போன்று நாளை இன்னும் ஏராளமான பிரச்சினைகளை எமது நாடு சந்திக்க நேரிடலாம். எனவே, நல்விழுமியங்கள் கொண்ட பொதுமக்கள் இனிமேலும் உருவாக்கப்படவில்லையெனில் நாளைய நாடு குழப்பங்கள் நிறைந்த சுடுகாடாக மாறிவிடும் அபாயம் எதிரே தெரிகிறது. சுருங்கக் கூறின், வினைத்திறன்மிக்க மனப்பாங்கு விருத்திகளை சமுதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையினால் மாத்திரம்தான் இலங்கையின் எதிர்காலத்தை வசந்த காலமாக மாற்ற முடியும்; என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உசாத்துணைகள்
01. கல்வியின் அடிப்படைகள்,தொகுதி-1,இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009
02. கல்வி உளவியல்,தொகுதி-1,இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009
03. வெற்றிகரமான கற்பித்தல், கலாநிதி பக்கீர் ஜஃபர், 2004
04. மகிழ்ச்சிகரமான பாடசாலை, கே. ஞானரத்தினம்
05. விரிவுரைகள், கே. ஞானரத்தினம், சிரேஷ;ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
Websites
02. www.statista.com
03. www.lankasri.net
04. www.aljazeera.com
05. www.statistic.gov.lk
06. www.ceylontoday.lk
07. www.worldometers.info
08. www.epid.gov.lk
09. www.thamilan.lk